சித்திரை திருவிழா ரத்து – கோவில் நிர்வாகம் அறிவிப்பு.!
உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா கொரோனா வைரஸ் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ஆண்டுதோறும் களைகட்டும் சித்திரை திருவிழா, மீனாட்சி அம்மன் திருக்கல்யாண தேரோட்டம் போன்றவை உலக புகழ் பெற்றவை. இதனிடையே நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் நிறைவடைய இருந்த ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இந்த ஊரடங்கில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி என்று தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, தமிழக கோயில்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்க இருந்த மதுரை சித்திரை திருவிழா ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருக்கல்யாண சம்பிரதாயங்கள் மட்டும் அன்றாட நடைபெறும். நித்திய பூஜைகளுடன் சேர்த்து மே 4 ஆம் தேதி காலை 9.05 முதல் 9.29 மணிக்குள் சன்னதி மோதல் பிரகாரத்தில் அமைந்துள்ள சேத்தி மண்டபத்தில் நான்கு சிவாச்சாரியார்கள் மட்டுமே உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றி திருக்கல்யாண நிகழ்வை நடத்தி வைப்பர் என கூறியுள்ளனர். மேலும் WWW.maduraimeenakshi.org என்ற இணையதளத்தில் திருக்கல்யாண நிகழ்வு ஒளிபரப்பு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.