மாநில அரசுகள் 60% வரை கூடுதல் கடன் பெறலாம் – ரிசர்வ் வங்கி ஆளுநர்.!
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து சில சலுகைகளை அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தாக்கம் தினந்தோறும் அதிகரித்து வருவதால் கடந்த 24 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து வைரஸ் பரவல் குறையும் என்று எதிர்பார்த்த நிலையில், தொடர்ந்து பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் நிறைவடைய இருந்த ஊரடங்கு, மேலும் 19 நீட்டித்து, மே 3 ஆம் வரை அமல்படுத்தப்படுகிறது என பிரதமர் மோடி காணொளிக் காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.
கொரோனா மற்றும் ஊரடங்கு உத்தரவால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்கை பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய பொருளாதாரம் கடும் சரிவை கண்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் கடந்த 27-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு சலுகைகளை அறிவித்தார். இதையடுத்து இன்று மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து சில சலுகைகளை அறிவித்துள்ளார். அப்போது கொரோனாவால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை ரிசர்வ் வங்கி மிக தீவிரமாக கவனித்து வருகிறது என்றும் வங்கிகள் இக்கட்டான சூழலிலும் இயங்குகின்றன என்று தெரிவித்தார்.
கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது ஏற்பட்டிருப்பது மிகப்பெரும் பொருளாதார சவால் என்றும் கொரோனாவுக்கு எதிரான போருக்கு ஆர்பிஐ முழுமையாக தயாராக உள்ளது என குறிப்பிட்டார். மேலும் 2021-22-ல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 % ஆக இருக்கும். உலகிலேயே ஜிடிபி வளர்ச்சி கணிசமாக உயர்வு கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று எனவும் இந்தியாவின் வளர்ச்சி 1.9% என ஐஎம்எஃப் கணித்துள்ளது. இது ஜி-20 நாடுகளில் அதிகம் என தெரிவித்தார். பின்னர் அவசர தேவைக்காக ரிசர்வ் வங்கியிடம் இருந்து 60% வரை கூடுதலாக மாநில அரசுகள் கடன் பெறலாம் என்றும் தெரிவித்துள்ளார்.