2வது முறையாக அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.1000 நிவாரணம் – முதல்வர்.!
கட்டடத் தொழிலாளர்கள் உட்பட அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் 2வது முறையாக ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள கட்டடத் தொழிலாளர்கள் உட்பட அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்கள் குடும்பத்திற்கும் 2வது முறையாக ரூ.1000 நிவாரண உதவி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதையடுத்து பிற மாநில தொழிலாளர்களுக்கு மே மாதத்திற்கான 15 கிலோ அரிசி, துவரம் பருப்பு மற்றும் எண்ணெய் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் கொரோனா தொற்றை தடுக்கும் நோக்கில் ஏற்கனவே தமிழகத்தில் இருக்கும் கட்டுப்பாடுகள் அனைத்தும் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
நாளையுடன் ஊரடங்கு உத்தரவு முடியவிருந்த நிலையில், ஏப்ரல் 30ம் தேதி வரை நீடிப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார். இதனை பேரிடர் மேலாண்மை சட்டம், குற்றவியல் விசாரணை முறை சட்டப்பிரிவு 144இன் படி ஊரடங்கு நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு நீடிக்கப்படுவதால் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும். இதையடுத்து தமிழ்நாட்டில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை பேக்கரிகள் இயங்க தடையில்லை என்றும் அதில் பார்சலுக்கு மட்டும் அனுமதி என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.