டெல்லியில் சூரியசக்தி கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு இன்று தொடக்கம்!
டெல்லியில் இன்று 45 நாட்டுத் தலைவர்கள் கலந்து கொள்ளும் சூரியசக்தி கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு தொடங்குகிறது.
சூரிய ஒளி அதிகம் கிடைக்கும் நாடுகள் எரிபொருளுக்கு பதில் சூரிய ஒளியை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்ற பருவநிலை மாநாட்டில் ஏற்கப்பட்ட கருத்தின் அடிப்படையில் ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசிய, சில ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து சூரியசக்தி கூட்டமைப்பை உருவாக்கின.
இந்த அமைப்பின் மாநாடு டெல்லியில் இன்று தொடங்குகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் 40 சதவீதம் என்ற அளவை 2030ம் ஆண்டுக்குள் இந்தியா பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே மற்ற நாடுகளும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மேம்படுத்துதல் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது. இதற்காக இந்தியா வந்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன உள்ளிட்ட 45 நாட்டுத் தலைவர்கள் இந்தியா வந்துள்ளனர்.
நேற்று குடியரசுத் தலைவர் மாளிகையில் இரவு விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்த பன்னாட்டுத் தலைவர்களை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர்.
குறைந்த செலவில் சூரிய சக்தியை சேமிக்கும் முறை, அதனைப் பயன்படுத்தும் முறை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. மேலும் இந்த மாநாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான 24 திட்டங்கள் நிறைவேற வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.