மும்பையின் பிரபல மருத்துவமனை மூடப்பட்டது! 26 நர்சுகள் மற்றும் 3 டாக்டர்களை தாக்கிய கொரோனா!
சீனாவை தொடர்ந்து, பல நாடுகளில் கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. இதனால், அனைத்து நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனாலும், கொரோனா வைரஸும் தனது தீவிர பரவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த வண்ணம் இல்லை.
இந்நிலையில், நாட்டிலேயே அதிக அளவாக மராட்டியத்தில் 781 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 45 பேர் பலியாகி உள்ளனர். மும்பை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், மும்பையில் உள்ள பிரபல ஒக்கார்ட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்தில் 26 நர்சுகள், 3 டாக்டர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதனால், அந்த மருத்துவமனைக்குள் செல்லவோ அல்லது மருத்துவமனையில் இருந்து வெளியே செல்லவோ யாருக்கும் அனுமதி இல்லை.
கொரோனா உறுதி செய்யப்பட்ட ஒவ்வொருவருக்கும் அடுத்தடுத்து நடத்தப்படும் இரு பரிசோதனைகளில் தொற்று இல்லை என தெரியும்வரை இந்த தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இதுபற்றி மாநகராட்சி கூடுதல் ஆணையாளர் சுரேஷ் ககானி கூறும்பொழுது, மருத்துவமனையில் இவ்வளவு பேருக்கு எப்படி பாதிப்பு பரவியது என்பது பற்றி தலைமை சுகாதார அதிகாரியின் கீழ் அமைக்கப்பட்ட குழுவினர் விசாரணை மேற்கொள்வார்கள். இது துரதிர்ஷ்டவசம் நிறைந்தது என்றும், அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.