தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா உறுதி – பீலா ராஜேஷ்
தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே 571 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 621 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட 50 பேரில் 48 பேர் டெல்லி சென்று திரும்பியவர்கள் என்றும் 2 பேர் சென்னையை சேர்த்தவர்கள் என தெரிவித்துள்ளார். இதையடுத்து மேலும் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த 57 வயதுடைய பெண் உயிரிழந்தார். இதனால் தமிழகத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து பேசிய அவர், வீட்டு கண்காணிப்பில் 91,851 பேர் உள்ளனர் என்றும் அரசு கண்காணிப்பில் 205 பேர் இருக்கின்றார்கள் என்று கூறியுள்ளார். இதனிடையே 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்து 19,060 பேர் வீடு திரும்பியுள்ளனர். வீடு வீடாக சென்று இதுவரைக்கும் 40,81,230 பேர் கண்காணிக்கப்பட்டுள்ளனர். மேலும் 5,016 பேருக்கு பரிசோதனை மாதிரிகளில் அனுப்பப்பட்டிருந்தது. இதில் 621 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்றும் டெல்லி சென்று திரும்பிய 1,475 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.