கொரோனா சிகிச்சைக்காக 2,500 ரயில் பெட்டிகளில் 40 ஆயிரம் படுக்கைகள் தயார் – ரயில்வே.!
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் ஆரம்பத்தில் சீனாவை மிரட்டியது. தற்போது கொரோனா மற்ற நாடுகளுக்கு பரவி உலக நாடுகளை ஆட்டிப்படைக்கிறது. கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்காததால் மக்களுக்கு பரவுவதை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடும் பல நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.
இதைதொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸால் தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் , உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுக்க பல நடவடிக்கைகளை மத்திய , மாநில அரசு எடுத்துவருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ரயில் பெட்டிகளை படுக்கைகளாக மாற்ற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதையெடுத்து நாடு முழுவதும் கொரோனா சிகிச்சைக்காக 2,500 ரயில் பெட்டிகளில் 40 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக ரயில்வே துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.