வரும் 7 ஆம் தேதி கிரிவலம் செல்லத் தடை – ஆட்சியர் கந்தசாமி
அண்ணாமலையார் திருக்கோயில் பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் முக்தி தரும் 7 நகரங்களில் ஒன்றான அண்ணாமலையார் திருக்கோயில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாகக் கருதப்படுகிறது. எனவே கோயிலில் கடவுளை வலம் வருதலைப் போல மலையை வலம் வரும் வழக்கம் இங்குள்ளது. இந்த மலையின் சுற்றளவு 14 கிலோமீட்டர் உள்ளது. எல்லா நாட்களிலும் மலையை மக்கள் வலம் வருகிறார்கள் என்றாலும் முழு நிலவு (பௌர்ணமி) நாளில் வலம் வருதல் சிறப்பாக கருதப்படுகிறது.
வரும் 7-ம் தேதி பௌர்ணமி நாள் காலை 11 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை கிரிவலம் செல்ல நல்ல நேரமாக கூறியுள்ளனர். இதனிடையே தமிழகம் மட்டுமல்லாம் நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு வரும் 14ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி அண்ணாமலையார் கோயிலில் 7 ஆம் தேதி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை என அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார்.