பெண் குழந்தைக்கு கொரோனா, ஆண் குழந்தைக்கு ‛லாக் டவுன் என பெயர் சூட்டல்
கொரோனா வைரஸ் உலக முழுவதும் பரவி உலக நாடுகளை மிரட்டி வருகிறது.இதனால் அனைத்து நாடுகளும் கொரோனா பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பும் , பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் 144 தடை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் உள்ள தியோரியா மாவட்டத்தில் பிறந்த ஒரு ஆண் குழந்தைக்கு ‛லாக் டவுன்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது .இது குறித்து குழந்தையின் தந்தை கூறுகையில்,என் குழந்தை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த சமயத்தில் தான் பிறந்தான். ஊரடங்கு என்பது தேசிய நலன் மீதான அக்கறை.எனவே எங்களின் குழந்தைக்கு ‘லாக்டவுன்’ பெயர் வைக்க முடிவு செய்தோம் என்று கூறினார். இதேபோல் கோரக்பூரில் பிறந்த பெண் குழந்தைக்கு ‛கொரோனா என்று பெயர் சூட்டியுள்ளனர்.இது குறித்து குழந்தையின் மாமா கூறுகையில், கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் ஒற்றுமையின் சின்னமாக இருப்பதால், குழந்தையின் தாயிடம் அனுமதி பெற்று கொரோனா என்று பெயர் வைத்ததாக கூறினார்..