பிரதமர் நரேந்திர மோடி பேச்சை மீறி தெலுங்குதேசம் கட்சி அமைச்சர்கள் ராஜினாமா!
தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த இரண்டு மத்திய அமைச்சர்களும் பிரதமர் மோடியின் சமாதான முயற்சியையும் மீறி, தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து, பாஜக தலைமையிலான மத்திய அரசில் இருந்து வெளியேற சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்தது. புதன் கிழமை கட்சி எம்பிக்கள், எம்எல்ஏக்களுடன் நடத்திய ஆலோசனைக்குப் பின்னர் இதனை அறிவித்த சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த தங்களது கட்சியைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களும் ராஜினாமா செய்வார்கள் எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து, புதன்கிழமை இரவு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் பாஜக தலைவர் அமித்ஷா தொலைபேசி மூலமாக ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், தெலுங்குதேசம் கட்சியின் அறிவிப்புக்கு பதிலடி தரும் வகையில், ஆந்திர மாநில அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பாஜகவைச் சேர்ந்த காமினேனி ஸ்ரீனிவாஸ், பிடிகொண்டாலா மணிக்யாலா ராவ் ஆகிய இரு அமைச்சர்களும் இன்று தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இதனிடையே, பிரதமர் மோடி, தொலைபேசி மூலமாக சந்திரபாபு நாயுடுவுடன் சுமார் 10 நிமிடங்கள் பேசினார். எனினும், பிரதமர் மோடியின் இந்த சமரச முயற்சி பலனளிக்கவில்லை. முன்னர் அறிவித்தபடி, தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த அசோக் கஜபதி ராஜூ, ஒய்.எஸ். சவுத்ரி ஆகிய இரண்டு மத்திய அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால்,தெலுங்குதேசம்-பாஜக கூட்டணி முறியும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.