கொரோனாவை தடுக்க மக்கள் நிதி தரலாம் – முதல்வர் பழனிசாமி
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது, முதல்வர் பொதுநிவாரண நிதிக்கு விருப்பம் இருப்பவர்கள் நிதியுதவி அளிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற உதவிகளை மக்கள் செய்யலாம் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
#Corona தொற்றால் ஏழை எளிய மக்கள் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய இன்னல்களிலிருந்து அவர்களை விடுவிக்கவும், தடுப்பு நடவடிக்கைகளுக்கும், மனம் உவந்து மக்கள் தங்கள் பங்களிப்பினை அளிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நன்கொடைகளுக்கு வருமான வரிச்சட்டம் பிரிவு 80(G) கீழ் 100% வரிவிலக்கு உண்டு. pic.twitter.com/qFQ2rS3i4M
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) March 27, 2020
முதல்வரிடமோ, அரசு அலுவலர்களிடமோ நன்கொடையை நேரடியாக வழங்குவதை ஊக்குவிக்க இயலாது என குறிப்பிட்டுள்ளார். மேலும் ரூ.10 லட்சத்திற்கு மேல் நிதி தருவோரின் விவரங்களை பத்திரிகையில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளார். இதையடுத்து நன்கொடைக்கு வருமான வரிச் சட்டப்பிரிவு 80(G)யின் கீழ் 100% வரிவிலக்கு உண்டு என்றும் தெரிவித்துள்ளார். இதனிடையே தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.