நியூசிலாந்து மசூதி துப்பாக்கிசூடு! குற்றத்தை ஒப்புக்கொண்ட பயங்கரவாதி!

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 15-ந்தேதி, நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள 2 மசூதிகளில் நடந்த துப்பாக்கி சூட்டில் 57 பேர் பலியாகினர். இந்த தாக்குதல் நடத்திய நபர் துப்பாக்கிச்சூட்டை  முகநூல் பக்கத்தில் நேரலையில் ஒளிபரப்பினார்.

அந்த நாட்டின் பிரதமர் ஜெசிந்தா, இந்த தாக்குதல் பயங்கரவாத தாக்குதல் தான் என உறுதி செய்தார். இதனையடுத்து, அந்நாட்டில் துப்பாக்கி பயன்பாட்டுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. 

ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த பயங்கரவாதியான பிரெண்டன் டாரண்ட் (வயது 25) தான் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை முகநூல் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்தார். இதனையடுத்து, இவர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீது கொலை மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

பிரெண்டன் டாரண்ட், ஜூன் மாதம் நடைபெற்ற விசாரணையின் போது தன்மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நிராகரித்தார். இந்நிலையில், கொரோனா தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதனால், நீதிமன்றத்திற்கு நீதிபதிகளோ, குற்றவாளிகளோ வார இயலாத நிலையில், பிரெண்டன் டாரண்டையும் நேரடியாக கோர்ட்டுக்கு அழைத்து வராமல் காணொலி காட்சி மூலம் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரது வக்கீல்களும் காணொலி காட்சி மூலமாகவே ஆஜராகி வாதாடினர்.

விசாரணையின் போது பிரெண்டன் டாரண்ட் தன் மீதான கொலை குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். அதே போல் 40 பேரை சுட்டுக்கொல்ல முயன்றதாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டையும் அவர் ஒப்புக்கொண்டார். அதனை தொடர்ந்து, இந்த வழக்கில் பிரெண்டன் டாரண்டை நீதிபதிகள் குற்றவாளி என அறிவித்தனர். 
 
இந்நிலையில், தற்போது கொரோனாவால் முடக்கப்பட்டுள்ள கோர்ட்டு இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர் அவருக்கான தண்டனை வழங்கும் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.