கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவர மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு தற்போது அமலில் உள்ளது.இந்நிலையில் மக்களின் அத்தியாவசிய பொருட்களை கருத்தில் கொண்டு அனைத்துஅரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மற்றும் இலவச அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் பொருட்களை வழங்குவதற்கு ரூ.2,187 கோடியே 80 லட்சத்து 68 ஆயிரம் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசின் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலர் தயானந்த் கட்டாரியா வெளியிட்ட அரசாணையில் கூறியுள்ளவை:
தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவும் மக்களுக்கு ஏற்படும் பிரச்சணைகளை கருத்தில் கொண்டும் சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைகளுக்கும் ரூ.1000 நிவாரணமாக வழங்கப்படும். அதனோடு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல் மாதத்துக்கான அரிசி, பருப்பு, பாமாயில்,சர்க்கரை உள்ளிட்டவைகள் இலவசமாக வழங்கப்படும். மேலும் நியாயவிலைக்கடைகளில் கூட்டத்தை தவிர்க்க டோக்கன் முறையில் ஒதுக்கப்பட்ட நாளிலும், நேரத்திலும் ரூ.1000 மற்றும் பொருட்களை மக்களுக்கு விநியேகிக்கப்படும். (மார்ச்) இம்மாதத்தில் பொருட்களை வாங்க இயலாதவர்கள் ஏப்ரல் மாதத்தில் அதனை சேர்த்து வாங்கிக் கொள்ளலாம் என்றும் இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் 2 கோடியே 1 லட்சத்து 46,993 அரிசி குடும்ப அட்டைகள் உள்ளதாகவும் இந்த அட்டைத்தாரர்களுக்கு ரூ.1000 வீதம் நிவாரணத் தொகை வழங்க ரூ.2014 கோடியே 69 லட்சத்து 93,000 நிதி தேவைப்படும் என்று மதிப்பிட்டு அரசுக்கு உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் கடிதம் அனுப்பியதாகவும், குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்பட வேண்டிய பருப்பு, பாமாயில்,சர்க்கரை குறித்த விவரங்கள் குறித்து உணவுப்பொருள் வழங்கல் கழகத்தின் மோலாண் இயக்குநர் கடிதம் ஒன்றையும் அனுப்பினார். அக்கடிதத்தில், பிப்ரவரி மாத ஒதுக்கீடு அடிப்படையில் பருப்பு 20 ஆயிரம் மெட்ரிக் டன் ஒரு மெட்ரிக் டன் ரூ.30 ஆயிரம் எனவும் ரூ.60கோடி ஒரு மாதத்துக்கு தேவைப்படும். அதே போல் 1 கோடியே 56 லட்சம் பாக்கெட் பாமாயில், ஒரு பாக்கெட் ரூ.25 வீதம் ரூ.39 கோடி, அந்தியோதயா அன்னயோஜனா அட்டைகளுக்கு 2,950 மெட்ரிக் டன்கள் சர்க்கரை, ஒரு மெட்ரிக் டன் ரூ.13,500 வீதம் ரூ.3 கோடியே 98 லட்சத்து 25 ஆயிரம் மற்றும் இதர அட்டைகளுக்கு 28,050 மெட்ரிக் டன்கள் ஒரு டன் ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.70 கோடியே 12 லட்சத்து 50 ஆயிரம் என மொத்தம் ரூ.173 கோடியே 10 லட்சத்து 75 ஆயிரம் தேவைப்படும் என குறிப்பிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து அரிசி குடும்ப அட்டைகளுக்கு ரூ.1000 வீதம் நிவாரணம் மற்றும் இலவச பொருட்களை ஏப்ரல் மாதத்துக்கு மட்டுமே வழங்க உணவுப்பொருள் வழங்கல் ஆணையருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும் விநியோ கூட்டத்தை கட்டுப்படுத்த டோக்கன் முறை பின்பற்ற வேண்டும். ரூ.1000 மற்றும் இலவசபொருட்களை பெற விரும்பாதவர்கள், ‘www.tnpds.gov.in’ மற்றும் tnepds கைபேசி செயலி மூலம் அட்டை எண்ணை குறிப்பிட்டு விருப்பத்தை அறிவிக்கலாம்.
அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னையில் உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் ஆகியோர் ரூ.1000 நிவாரணத் தொகையை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக ரூ.2,187 கோடியே 80 லட்சத்து 68 ஆயிரம் நிதி ஒதுக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது