திருச்சி கர்ப்பிணிப் பெண் உஷா வழக்கை கொலை வழக்காக மாற்றக்கோரி போராட்டம்!
திருச்சி அரசு மருத்துவமனை முன்பு கர்ப்பிணிப் பெண் உஷா உயிரிழந்த வழக்கை கொலை வழக்காக மாற்றக்கோரி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மத்திய சிறையில்,போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் காமராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மீது உயிர்ப்பலி ஏற்படுத்தும் விதத்தில் விபத்தை ஏற்படுத்துதல் என்ற பிரிவு 304-லும் உயிர்பலி ஏற்படும் என்று தெரிந்தே ஒரு செயலில் ஈடுபடுதல் என்ற பிரிவு 336-லும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் உடற்கூறு ஆய்வுக்காக உஷா உடல் வைக்கப்பட்டுள்ள திருச்சி அரசு மருத்துவமனை முன் உறவினர்களும், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களும் திரண்டனர். காவல் ஆய்வாளர் காமராஜ் மீதான வழக்கை 302 என்ற பிரிவின் கீழ் கொலை வழக்காக மாற்றவும் காமராஜை பணிநீக்கம் செய்து அதுதொடர்பான ஆணையை தங்களிடம் காட்டவும் வலியுறுத்தினர். அதுவரை உடலைப் பெறவும், கலைந்து செல்லவும் மறுத்து அவர்கள் பிரேதப் பரிசோதனைக் கூடம் முன்பு அமர்ந்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனிடையே போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் காமராஜை பணியிடை நீக்கம் செய்து திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜுலு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.