கை எடுத்து கும்பிட்ட காவல்துறை அதிகாரி..! மனம் நெகிழ்ந்து காலில் விழுந்த வாகன ஓட்டி..!
சென்னை மாநகரில் தமிழக அரசின் உத்தரவுகளை மீறியும் சீர்மிகு காவல்துறையினரின் எச்சரிக்கையை மீறியும் வாகனத்தில் வந்த வாகன ஓட்டிகளை கையெடுத்து கும்பிட்டு போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்து வருகிறார்.
அவரது வேண்டுகோளால் மனம் நெகிழ்ந்த வாகன ஓட்டிகளில் ஒருவர், அவரது காலில் விழுந்தார். நெகிழ்ச்சியான் இந்த நிகழ்வு அண்ணாசாலை ஸ்பென்சர் சிக்னல் அருகே நடந்தது. கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அதில், முக்கியமாக மக்களை தனிமைப்படுத்திக்கொள்ளுதல் என்பதை வலியுறுத்தும் விதமாக பாரத பிரதமர் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். இதேபோல் தமிழக அரசின் சார்பிலும் இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த அரசின் உத்தரவை மீறுவோர் மீது இந்திய பேரிடர் மீட்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பிரிவு 188-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.என்றாலும் பொதுமக்கள் இந்த ஊரடங்கின் மகத்துவத்தை உணராமல், தனிமைப்படுத்துதல் குறித்த அவசியத்தை உணராமல் பொது இடங்களில் கூடும் நிலை உள்ளது.
பல இடங்களில் சீர்மிகு காவல் துறையினர் வாகன ஓட்டிகளை கொரோனோ குறித்து அறிவுரை சொல்லியும், மீறுவோரை லத்தியால் இனிப்பு வழங்கியும் அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், சென்னை அண்ணா சாலை ஸ்பென்சர் சிக்னலில் பணியாற்றும் ரஷீத் என்கிற போக்குவரத்து உதவி ஆய்வாளர் வாகன ஓட்டிகளிடம் உருக்கமாக வேண்டுகோள் வைக்கிறார்.
அவர், ‘ பொதுமக்கள் யாரும் வெளியே நடமாடாதீர்கள். நான் உங்களைக் கையெடுத்து கும்பிட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து வீட்டில் இருங்கள். நீங்கள் அனைவரும் தெய்வம் போன்றவர்கள். தயவு செய்து எனக்காக மற்றும் உங்களுக்காக மற்றும் நமக்காக பொது வெளியில் வராதீர்கள்.’ என்று கேட்டுக்கொண்டார். இதைப் பார்த்த வாகன ஓட்டிகள் நெகிழ்ச்சியடைந்தனர்.
ஒரு இளைஞர் பைக்கை நிறுத்திவிட்டு வண்டியை விட்டு கீழே இறங்கி வந்து போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரஷீதின் காலில் விழுந்தார். பின்னர் வாகன ஓட்டிகள் புறப்பட்டுச் சென்றனர். பின் தொடர்ந்து ரஷீத் தனது பணியைத் தொடர்ந்தார். அவர் அதன் பின்னரும் வருகிற அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி கையெடுத்துக் கும்பிட்டு வேண்டுகோளை வைத்தவண்ணம் இருந்தார்.
மற்ற மாநிலங்களில் சீர்மிகு காவல்துறையினர் கட்டுப்பாடுகளை மீறுவோர்கள் மீது தடியால் முரட்டுத்தனமாக அடித்து விரட்டும் பல வீடியோக்களை இணையத்தில் வைரலாகி வரும் இந்த வேலையில் சென்னை மற்றும் மற்ற மாவட்ட சீர்மிகு காவல்துறையினரின் அறிவுபூர்வமான அணுகுமுறை பொதுமக்களை சற்று சிந்திக்க வைத்துள்ளது.