இலங்கையின் கண்டி(KANDY)-தெல்தெனிய பகுதிகளில் வன்முறை சம்பவம்!
நேற்று நடைப்பெற்ற வன்முறை சம்பவங்களில் இலங்கையில் உள்ள கண்டி(KANDY)-தெல்தெனிய, திகன பகுதிகளில் இரண்டு முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் வீடுகள், வர்த்தக நிலையங்கள் ஆகியவை தாக்குதலுக்குள்ளாகியுள்ளன.பெரும்பான்மை இன குழுவினரின் இந்த நடவடிக்கை காரணமாக திகன மஜ்ஜித்துல் நூர் ஜும் ஆப் பள்ளிவாசல் மற்றும் கெங்கல்ல ஜும்ஆ பள்ளிவாசல் போன்றவை பெரும் சேதத்திற்குள்ளாகியுள்ளன.
முஸ்லிம்களின் பல வர்த்தக நிலையங்கள், குடியிருப்புக்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஐந்திற்கும் மேற்பட்ட வீடுகள், ஆறு கடைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இந்த வன்முறைகளையடுத்து கண்டி நிர்வாக மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து பிரதேசங்களிலும் நேற்று பிற்பகல் 3.15 முதல் இன்று காலை 6 மணி வரையிலான காலப்பகுதிக்கு பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வன்முறைகள் பரவாமல் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் நோக்கிலேயே ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதாக போலீஸ் பேச்சாளர் போலீஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் ஒன்றினை மையப்படுத்தி, தெல்தெனிய போலீஸ் பிரிவில் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதாக கூறிய அவர், அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, கலகமடக்கும் போலீசாரும், போலீஸ் அதிரடிப்படையினரும் களத்தில் இறக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியதுடன் பிரதேசத்தின் பதற்ற நிலையை நீக்கி வன்முறைகள் பரவுவதை தவிர்த்து அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவை அமுல் செய்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
போலீஸ் கலகமடக்கும் பிரிவினரையும், போலீஸ் அதிரடிப் படையினரையும் மீறி திகன, கெங்கல்ல மற்றும் தெல்தெனியவில் வன்முறைகள் பரவிய நிலையில், கண்டி மாவட்ட பிரதிப் போலீஸ் மா.அதிபர் ஏக்கநாயக்க, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க ஆகியோரின் ஆலோசனைக்கமைய இராணுவத்தை உதவிக்கு அழைத்த நிலையில் தற்போது இராணுவமும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மத்திய மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஆர்.எச். டயஸின் நேரடி வழி நடத்தலில் நேற்று மாலை சுமார் 100 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் மேலதிக துருப்பினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து கேசரியிடம் தெரிவித்தார்.
கண்டி – தெல்தெனிய, திகன பகுதிகளில் நேற்று இடம்பெற்ற வன்முறைகள் காரணமாக நகர பகுதியில் வர்த்தக நிலையங்களும் தாக்குதலுக்குள்ளாகின. திகன மஜ்ஜித்துல் நூர் ஜும்ஆப் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. கெங்கல்ல பள்ளிவாசல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வன்முறைகளையடுத்து நேற்று பிற்பகல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த போதும், குடியிருப்பு பகுதிகளை நோக்கி வன்முறைகள் மெல்ல நகர்ந்ததாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.