அவங்கிட்ட ஜாக்கிரத..சேரதீங்க..மேலே இருந்து யாரும் வரமாட்டார்கள்!மாஸ்டர் ஸ்பீச்
மனிதனைக் காப்பாற்ற மனிதன்தான் வருவான், மேலே இருந்து யாரும் வரமாட்டார்கள் என்று மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி அதிரடியாக பேசினார்.
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “மனிதனைக் காப்பாற்ற மனிதன்தான் வருவான், மேலே இருந்து யாரும் வரமாட்டார்கள். கொரோனா வைரஸ் குறித்து யாரும் அச்ச பட வேண்டாம். இது மாதிரியான தருணத்தில் உறவினர்களே நம்மைத் தொடுவதற்கு யோசிக்கின்ற போது நம்மைத் தொட்டு சிகிச்சையளிக்க கூடிய மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.கடவுளைக் காப்பாற்றுகிறேன் என்று கூறுபவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் மகத்தான மனிதரை கடவுள் இன்னும் படைக்கவில்லை. கடவுளுக்கும் மனிதனுக்கும் நடுவே எந்த மதமும் கிடையாது. தன்னுடைய மதத்தில் கூறியிருப்பதைப் பரப்பாமல் அனைவரிடமும் மனிதத்தையும், சகோதரத்துவத்தையும் பகிருங்கள். இந்த உலகம் மனிதன் வாழ்வதற்கானது. அன்பைப் பகிர்ந்து சகோதரத்துவத்துடன் இருப்போம் என்று பேசினார்.