அதிரடி முடிவெடுத்த கூகுள்.! ஊழியர் ஒருவருக்கு கொரோனா.!
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக, உலகெங்கிலும் பல நாடுகளிலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல் கலாசார மற்றும் கலை தொடர்பான நிறுவனங்களும் மூடப்பட்டு வருகின்றன. மேலும் பொது இடங்களில் மக்கள் கூட்டமாக கூட கூடாது என்று பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். கொரோனா வைரஸை உலக முழுவதும் பரவும் தொற்று நோய் என உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் அறிவித்தது.
இந்த நிலையில் பெங்களூரில் கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் 26 வயது மென்பொருள் பொறியாளர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 75 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்துள்ளனர். இதனால் கூகுள் நிறுவன ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்து பணிபுரியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அந்நிறுவனம் கூறியுள்ளது. இதனிடையே ட்விட்டர் மற்றும் அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரிய கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.