பல ஆண்டாக தூர்வாரப்படாமல் இருக்கும் வைகை அணையின் அவல நிலையை கவனிப்பாரா விவசாயிகளின் முதல்வர்…

Default Image

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வரும் உபரிநீரை தேக்கி வைக்கவும், மூல வைகையாற்றில் வரும் நீரை தேக்கி வைக்கவும் 1958ம் ஆண்டு அப்போதைய மதுரை மாவட்டத்தின் ஆண்டிபட்டியில் வைகை அணை கட்டப்பட்டது. இந்த வைகை அணை தூர்வாரப்படாமலே பல ஆண்டுகாலமாக இருப்பதால்  நீர்த்தேக்க பகுதியில் மலை போல் குவிந்துள்ள வண்டலால், அணையின் கொள்ளளவு மிகவும் குறைந்து விட்டது. இதனால் நீர் இங்கு தேங்க முடியாமல்  மேகமலையில் உள்ள நீரோடைகளும் தங்களின்  திசை மாறி ஓடுவதால், அணைக்கு நீர்வரத்தும் வெகுவாக குறைந்து வருகிறது. வைகை அணையின் உயரம் 71 அடி. அணையில் 6,878 மில்லியன் கனஅடி வரை நீர் தேக்க முடியும். நிலப்பரப்பில் அமைந்துள்ளதால் 62 ஆண்டுகளில், அணை நீர்த்தேக்க பகுதியில் ஏரளாமாக வண்டல் மண் படிந்துள்ளது. இறுதியாக நடத்தப்பட்ட   ஆய்வின்படி 1,200  மில்லியன் டன் வண்டல் மண், 27 அடி உயரத்துக்கு மலை போல் குவிந்துள்ளது என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது . இதனால் அணையின் நீர் கொள்ளளவு பகுதியில்  ஆறில் ஒரு பங்கை வண்டல் ஆக்கிரமித்துள்ளது. 
அணையில் தற்போது 5,575 மில்லியன் கனஅடி மட்டுமே தண்ணீர் தேக்க முடிகிறது. 2 ஆண்டுகளுக்கு முன் அணையை தூர்வார ரூ.200 கோடியில் திட்டம் உருவாக்கப்பட்டது. இது தொடர்பாக சிங்கப்பூர் கம்பெனியுடன் பேச்சுவார்ததை நடந்தது. அதன் பின்னர் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. ஏற்கனவே அணையின் கொள்ளவு குறைந்து விட்ட நிலையில், தற்போது நீர்வரத்திலும் புதிய தடை உருவாகியுள்ளது.  எனவே விவசாயிகளின் முதல்வர் என அழைக்கப்படும் தமிழக முதல்வர் இதில் சிறப்பு கவனம் செலுத்தி மதுரை மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என அம்மாவட்ட விவசாயிகள் கருதுகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்