வெற்றிகரமாக திறக்கப்பட்டது…. காஷ்மீர் பள்ளிகள்… மகிழ்ச்சியுடன் பள்ளி புறப்பட்ட மாணவர்கள்…
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், அப்பகுதியை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசின் நேரடி கட்டுப்பட்டின் கீழ் கொண்டுவந்தது. இந்த நடவடிக்கையின் காரணமாக பாதுகாப்பு கருதி அரசியல் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.மேலும் அங்கும், இணையதளம் உள்ளிட்ட தொலைதொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டன. மேலும், ஜம்மு-காஷ்மீரில் செயல்பட்டுவந்த அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. இந்நிலையில் அங்கு நிலைமை தற்போது சீரடைந்துள்ளதையடுத்து மூடப்பட்ட பள்ளிகளை பள்ளிகளை திறக்க யூனியன்பிரதேச நிர்வாகம் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் மேற்கொண்டன. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்கான தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் முன்வராததாலும், குளிர்கால விடுமுறை காரணமாகவும் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் காஷ்மீரில் திங்கட்கிழமை (நேற்று) முதல் பள்ளிகள் திறக்கப்படும் என யூனியன் பிரதேச கல்வித்துறை இயக்குனர் முகம்மது யானூஸ் மாலிக் தெரிவித்துள்ளார். மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பெற்றோர் தங்கள் குழந்தைகளை எந்தவித தயக்கமும் இன்றி பள்ளிகளுக்கு அனுப்பலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து 7 மாதங்களுக்கு பிறகு நேற்று காஷ்மீரில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு மகிழ்ச்சியாக அனுப்பிவைத்தனர். மாணவ-மாணவிகளும் ஆர்வமுடன் பள்ளிகளுக்கு அதிக எண்ணிக்கையில் வந்தனர்.