காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக மு.க.ஸ்டாலின்-முதலமைச்சர் நேரில் சந்திக்க வாய்ப்பு?
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆறுவார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பிப்ரவரி 16 ம் தேதி வழங்கிய தீர்ப்பில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியாகி 2 வார காலம் கடந்துவிட்ட நிலையிலும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது குறித்து, முதலமைச்சர் பழனிசாமியும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் தொலைபேசி மூலமாக ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும், முதலமைச்சர் பழனிசாமி தரப்பிலோ, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தரப்பிலோ இந்தத் தகவல் உறுதிசெய்யப்படவில்லை. அதேநேரத்தில் இதுவரை மறுக்கப்படவும் இல்லை.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.