3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 39 ரன்கள் பின்தங்கிய இந்திய அணி .!
- இன்றைய 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்துள்ளது.
- நியூசிலாந்து அணியை விட இந்திய அணி 39 ரன்கள் பின்தங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி தற்போது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இப்போட்டியானது வெல்லிங்கடனில் நடைபெற்று வருகிறது. முதலில் இறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 165 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டை இழந்தது.
பின் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி நேற்றைய 2-ம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழந்து 216 ரன்கள் எடுத்து இந்திய அணியை விட 51 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
இன்றைய 3-ம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே பும்ரா வீசிய பந்தில் வாட்லிங் வெளியேற பின் வந்த சவுதி 6 ரன்களில் அவுட் ஆனார். இதையெடுத்து கிராண்ட்ஹோமுடன் ஜோடி சேர்ந்த ஜேமிசன் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர்.சிறப்பாக விளையாடிய ஜேமிசன் 44 ரன்களும் , கிராண்ட்ஹோமும் 43 ரன்களும் அடித்தனர்.
பின்னர் ட்ரெண்ட் போல்ட் கடைசி நேரத்தில் அதிரடி காட்ட நியூசிலாந்து அணி 348 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியாவை விட 183 ரன்கள் முன்னிலையில் நியூசிலாந்து இருந்தது.இதையெடுத்து தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கியது இந்திய அணி.
முதல் இன்னிங்க்ஸை போல பிருத்வி ஷா ,புஜாரா சொற்ப ரன்களில் வெளியேறினர்.பின்னர் நிதானமாக விளையாடி மாயங்க் அகர்வால் அரைசதம் அடித்து 58 ரன்னில் வாட்லிங்கிடம் கேட்சை கொடுத்தார்.பின்னர் கேப்டன் கோலி 19 ரன்னில் நடையை கட்டினார்.
இந்நிலையில் இன்றைய 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ஹனுமா விஹாரி(15) , ரஹானே (25) ரன்களுடன் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து அணியை விட இந்திய அணி 39 ரன்கள் பின்தங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.