தெரிந்து செய்த பாவமும் தெரியாமல் செய்த பாவமும் தவிடுபொடியாக சோமசுந்தரனை வணங்குங்கள்
ஒரு முறை வேடன் ஒருவன் விலங்குகளை வேட்டையாட காட்டுக்கு சென்றான். வெகுநேரம் அலைந்து திரிந்தும் ஒரு விலங்கு கூட அவனிடம் அகப்படவில்லை. பொழுதும் கழிந்து நன்றாக இருட்டிவிட்டது. அப்போது அங்கே ஒரு புலி ஒன்று வந்துவிட, அதற்கு பயந்து அந்த வேடன் அங்கிருந்த மரத்தில் ஏறிக்கொண்டான்.அந்த புலி அந்த மரத்தையே சுற்றி சுற்றி வந்தது. எனவே மரத்தில் கண் அயர்ந்தால், கீழே விழுந்து புலிக்கு இரையாகிவிடக்கூடும் என்பதால் தூக்கம் வராமல் இருக்க அவன் அந்த மரத்தின் இலைகளை கீழே பறித்து விடிய விடிய போட்டுக் கொண்டே இருந்தான். அந்த இலைகள் எல்லாம் மரத்தின் அடியில் இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்து கொண்டிருந்தன. அந்த மரம் வில்வ மரமும் ஆகும். மேலும், அன்றைய தினம் மகா சிவராத்திரி என்பதால் இரவு முழுவதும் சிவபெருமானை கண் விழித்து பூஜித்த பலனையும் தன்னை அறியாமலேயே பெற்றான். அதன்காரணமாக, அந்த வேடனுக்கு சோமசுந்தரன் முக்தி அளித்து அவனுக்கு மோட்சத்தையும் அருளினார்என்கிறது புராணக்கதை. எனவே, மகா சிவராத்திரி அன்று விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப்போகும் என்கிறார்கள் பெரியோர்கள். எனவே சிவனுக்கு உகந்த சிவராத்திரியில் சிவனின் சிந்தை அடி வைத்து போற்றினால் நிச்சயம் முக்தி கிடைக்கும் எனவே அந்த சுந்த மகாலிங்க மூர்த்தியை வணங்கி அவன் அருள் பெருவோம்.