தம்பியை பாகிஸ்தான் பிரதமராக்க துடிக்கும் அண்ணன்…!
பனாமா ஊழலில் சிக்கி தனது பதவியை இழந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரிப், பஞ்சாப் மாநில முதல்வரும் தனது சகோதரருமான ஷாபாஸ் ஷெரிப்பை பிரதமர் பதவியில் அமர்த்த திட்டமிட்டுள்ளார்.
பனாமா ஊழலில் சிக்கி பதவியிழந்த நவாஸ் ஷெரிப் இனி பொதுவாழ்விலும் ஈடுபட கூடாது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அவருக்கு தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டுக்கு மூன்று முறை பிரதமராகியும் ஒரு முறை கூட 5 வருடங்கள் நவாஸ் ஷெரிப் முழுமையாக ஆட்சி செய்தது இல்லை. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த நவாஸ் ஷெரீப் 1990ம் ஆண்டு முதல் 1993ம் ஆண்டு வரையும் 1997 முதல் 1999ம் ஆண்டு வரையும் இதற்கு முன் பதவியில் இருந்துள்ளார். இரு முறையும் ராணுவத் தளபதிகளால் பதவியை இழந்தார். 1999ம் ஆண்டு பர்வேஷ் முஷரப் ராணுவப்புரட்சி செய்து ஆட்சியைக் கைப்பற்றியதும் இவரின் ஆட்சிக் காலத்தில்தான்.
பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அளித்துள்ளத் தீர்ப்பில், ” 2013ம் ஆண்டு தேர்தலின் போது, வேட்பு மனுத்தாக்கலில் துபாயைச் சேர்ந்த FZE நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதையும் இயக்குனர்கள் குழுத் தலைவராக இருப்பதையும் மறைத்ததன் மூலம் நாடாளுமன்றத்துக்கும் நீதிமன்றத்துக்கும் நேர்மையாக நடக்கத் தவறியிருக்கிறார். எனவே அவர், நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து இருக்கும் தகுதியை இழக்கிறார். இனிமேல், அவர் பதவியில் நீடிப்பது நேர்மையும் தார்மீகமும் அல்ல” எனக் கூறியுள்ளது.
இதையடுத்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் லாகூர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நசாஸ் ஷெரிப் இழப்பதாக அறிவித்தது. பாகிஸ்தானுக்கு இதுவரை இடைக்கால பிரதமர் நியமிக்கப்படவில்லை. லாகூர் தொகுதியில் இருந்துதான் நவாஸ் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நவாஸ் ஷெரீப் கட்சிக்கு பெரும்பான்மை இருப்பதால், கட்சி பரிந்துரைக்கப்படுவர்கள் பிரதமராக வாய்ப்புள்ளது. அந்தவகையில், எந்த பிரச்னையும் இல்லை. பஞ்சாப் மாகாண முதல்வராக உள்ள தன் இளைய சகோதரர் ஷாபாஸ் ஷெரிப்பை பிரதமர் பதவிக்கு கொண்டு வர நவாஸ் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
பஞ்சாப் மாநிலத்திலும் மற்றும் லாகூர் நகரிலும் நவாஸ் ஷெரிப்பின் முஸ்லீக் கட்சியானது அதிகமான பலம் பெற்றுள்ளது.ஆகையால் ஷாபாஸ் ஷெரிப் , நவாஸின் தொகுதியில் போட்டியிட்டால் எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கபடுகிறது.இந்நிலையில் நவாஸ் ஷெரிப்பின் மகள் மரியத்துக்கும் பிரதமராகும் வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.ஆனால் கட்சியில் இவர் எந்தப் பொறுப்பிலும் இல்லை என்பதும் குறுப்பிடத்தக்கது.இந்நிலையில் கட்சியின் முக்கியமான தலைவர்களான பாகிஸ்தான் நாடாளுமன்ற கீழ் அவை சபாநாயகர் சர்தார் ஆயாஸ் சித்திக், திட்டமிடுதல் துறை அமைச்சர் ஆஷான் இக்பால், பாதுகாப்புத்துறை அமைச்சர் க்வாஜா முகமது ஆஷில் ஆகியோரின் பெயர்களும் பிரதமர் பதவிக்கு அடிபடுகிறது.