பாங்காக், சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ.9 லட்சம் அமெரிக்க கரன்சி பறிமுதல்: சென்னையை சேர்ந்த 2 பேர் கைது
சென்னை : சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஸ்கூட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.45 மணிக்கு சிங்கப்பூருக்கு புறப்பட தயாரானது. அதில் பயணம் செய்ய வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, சென்னையை சேர்ந்த அயூப்கான் (32) என்பவர் சுற்றுலா பயணியாக சிங்கப்பூர் செல்ல இருந்தார். அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி சூட்கேஸ் மற்றும் பைகளை சோதனையிட்டனர். அதில், மடித்து வைத்த உடைகளுக்கு இடையே கட்டுக்கட்டாக அமெரிக்கா கரன்சிகள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதன் இந்திய மதிப்புக்கு ரூ.6 லட்சம் என கூறப்படுகிறது. இதையடுத்து சுங்க அதிகாரிகள், அயூப்கானின் பயணத்தை ரத்து செய்து, அவரிடம் இருந்த அமெரிக்க கரன்சிகளை பறிமுதல் செய்தனர்.
முன்னதாக 12.30 மணிக்கு சென்னையில் இருந்து தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் பாங்காங் புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் சென்னையை சேர்ந்த முருகேசன் (38) என்பவர் சுற்றுலா பயணிகள் விசாவில் தாய்லாந்து செல்ல இருந்தார். அவரை நிறுத்தி, அதிகாரிகள் சோதனை செய்தபோது, கைப்பைக்குள் கருப்பு நிற பார்சல் இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது, கட்டுக்கட்டாக அமெரிக்க கரன்சி இருப்பதை கண்டுபிடித்தனர். அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் இந்திய மதிப்பு ₹3 லட்சம் என கூறப்படுகிறது. இதைதொடர்ந்து பிடிபட்ட அயூப்கான், முருகேசன் ஆகியோரிடம் இந்த பணத்தை யார் கொடுத்து அனுப்பியது. யாருக்கு கொடுக்க கொண்டு செல்லப்படுகிறது என்பது உள்பட பல்வேறு கோணங்களில் துருவி துருவி விசாரிக்கின்றனர். அடுத்தடுத்த விமானங்களில் வெளிநாட்டு கரன்சியை கடத்த முயன்ற 2 பேர் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பேரீச்சம் பழ பார்சலில் தங்கம் கடத்தியவர் சிக்கினார்
குவைத்தில் இருந்து குவைத் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று காலை 7 மணியளவில் வந்து சேர்ந்தது. அதில் வந்த பயணிகளை, சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த கரிமுல்லா (34) என்பவர், குவைத் நாட்டுக்கு சுற்றுலா பயணியாக சென்று திரும்பினார். அவர் கொண்டு வந்த உடமைகளை சோதனை செய்தனர். ஆனால், அதில் எதுவும் சிக்கவில்லை. ஆனாலும், அதிகாரிகளுக்கு சந்தேகம் தீரவில்லை. இதையடுத்து கரிமுல்லா, குவைத் நாட்டில் இருந்து 2 பேரீச்சை பழம் பார்சல்கள் வாங்கி வந்தார். அந்த பார்சல்களை, அதிகாரிகள் பிரித்து பார்த்தனர். அதில் தங்கத்தை சிறிய சிறிய துண்டுகளாக பேரீச்சம் பழங்களுடன் கலந்து மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். மொத்தம் 9 துண்டுகளாக 325 கிராம் தங்கம் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.10 லட்சம் என கூறப்படுகிறது. இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், கரிமுல்லாவை கைது செய்து, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.