வரலாற்றில் இன்று(08.02.2020)… இந்தியாவின் மூன்றாவது குடியரசு தலைவர் பிறந்த தினம் இன்று,,..
இந்திய கல்வித்துறையில் சிறந்த அறிஞராகவும் திறமைமிக்க நிருவாகியாகவும், ஜனநாயக இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவருமான ஜாஹீர் உசேன் பிறந்த தினம் இன்று. இவர், ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் 1897ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் நாள் பிறந்தார். இவர், உத்தரப் பிரதேசத்திலுள்ள எடவா எனும் ஊரில் தனது உயர்நிலைக் கல்வியை முடித்தார். இதன் பின் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் ஒரு பட்டம். பின் ஜெர்மனியிலுள்ள பெர்லின் பல்கலைக் கழகத்தில் மேற்படிப்பு பயின்று பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இவர் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் மாணவராக இருந்தபோது , மகாத்மா காந்தியடிகளின் மீது ஏற்பட்ட பற்று இவரை தீவிர காந்திய பற்றாளரானாராக ஆக்கியது. அதிலும் குறிப்பாக காந்தியடிகளின் ஆதாரக் கல்விமுறை இவரை மிகவும் கவர்ந்த்து என்றே குறிப்பிடலாம், இதன் காரணமாக இவர், கல்வித்துறையில் பணியாற்றியபோது ஆதாரக் கல்விமுறையினை நாடெங்கும் பரப்ப அரும்பாடுபட்டார். பின்னாளில் இவர், இந்தியநாட்டின் தலைநகரான டெல்லியில் அமைந்துள்ள ஜாமியா மில்லியா முஸ்லீம் பல்கலைக் கழகத்தின் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக 1926 ம் ஆண்டு முதல் 1948ம் ஆண்டு வரை பணியாற்றினார்.
இதேபோல், அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகவும் எட்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு சுதந்திரம் அடைந்த போது. இவர், பீகார் மாநிலத்தின் ஆளுநராகவும் இருந்தார். பின், 1962 ல் மே மாதம் இவர், இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் பின்னாளில் அதாவது, 1967 ஆம் ஆண்டு இவர், இந்திய குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இப்பதவியில், இரண்டு ஆண்டுகளே இருந்தார். இவர் பதவியில் இருக்கும் போதே அதாவது, 1969 மே மாதம் 3 ஆம் நாள் காலமானார். இவர் கல்வித் துறையில் ஆற்றிய அருந்தொண்டினைப் பாராட்ட இந்திய அரசு இவருக்கு 1954 ஆம் ஆண்டில் பத்ம விபூஷண் எனும் விருது வழங்கிப் பாராட்டப்பட்டது. இதன் பின், 1963 ஆம் ஆண்டு இந்திய நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. இதேபோல், டெல்லி, கொல்கத்தா, அலகபாத், அலிகார், கெய்ரோ ஆகிய பல்கலைக் கழகங்கள் இவருக்கு இலக்கிய மேதை என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்துள்ளன. இவரது பிறந்த நாளில் இவரை நினைவு கொள்வோம்.