தனி பயங்கரவாத அமைப்பு… காஷ்மீருக்காக துவக்கியுள்ளதாக அல்குவைதா அறிவிப்பு
டெல்லி:ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்காக, தனி பயங்கரவாத அமைப்பை, அல் குவைதா துவக்கி உள்ளது. ஜம்மு காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையில், பி.டி.பி., பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. சர்வதேச பயங்கரவாத அமைப்பான, அல் குவைதா, பல நாடுகளில், பல்வேறு பெயர்களில் இயங்கி வருகிறது.
ஜம்மு காஷ்மீரில், ‘அன்சர் கஸ்வத் உல் ஹிந்த்’ என்ற பெயரில், புதிய பயங்கரவாத அமைப்பை, அல் குவைதா துவக்கி உள்ளது.
இதுகுறித்து அல் குவைதா பயங்கரவாத அமைப்பின், ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை:
முஸ்லிம் நாடான காஷ்மீரில், இந்திய ஆக்கிரமிப்பாளர்களை விரட்டி அடிக்க, புனித போரான, ஜிகாத்தை துவக்க வேண்டிய அவசியம் வந்துள்ளது. இந்திய முஸ்லிம்கள், கோழைகளாக உள்ளனர். இந்திய அரசுக்கு எதிராக அவர்கள், ஜிகாத் துவக்க வேண்டும்.
இதற்காக, காஷ்மீரில், அன்சர் கஸ்வத் உல் ஹிந்த் என்ற அமைப்பு துவக்கப்பட்டு உள்ளது. இந்த அமைப்பின் கமாண்டராக, ஜாகிர் ரஷீத் பட் நியமிக்கப்பட்டு உள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய பயங்கரவாத அமைப்பின், கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ள பட், காஷ்மீரைச் சேர்ந்தவன். பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் கல்லுாரியில் படித்து கொண்டிருந்தவன், பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டு, ஹிஸ்புல் முஜாஹிதின் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்தான்.
பின், ஹிஸ்புல் அமைப்பிலிருந்து பிரிந்து, தனி பயங்கரவாத அமைப்பை துவக்கினான். இப்போது, அல் குவைதா துவக்கியுள்ள அமைப்பில், கமாண்டராக நியமிக்கப்பட்டு உள்ளான். இது மக்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பி உள்ளது.
காஷ்மீரில், புதிய பயங்கரவாத அமைப்பை, அல் குவைதா துவக்கி உள்ளது பற்றி, உளவுத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘காஷ்மீர் உட்பட இந்தியாவின் எந்த பகுதியிலும், அல் குவைதாவால் கால் பதிக்க முடியாது. ‘சர்வதேச பயங்கரவாதத்தில், முஸ்லிம் இளைஞர்களை ஈர்ப்பதற்காக, இன்டர்நெட் மூலம் நடத்தப்படும் முயற்சி இது’ என்றனர்.