செந்தில் பாலாஜி கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்.!
- செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது அந்தத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- செந்தில் பாலாஜி வீட்டை சோதனையிட மத்தியக் குற்றப் பிரிவு போலீசார் அனுப்பிய நோட்டீசுக்கு தடை கோரிய முறையீட்டை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது அந்தத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டில் சென்னை குற்றப்பிரிவு போலீஸ் சோதனை நடத்தினர். மேலும் அவரது ஜவுளி ஏற்றுமதி அலுவலகம் மற்றும் அவரின் தம்பி அசோக் வீட்டிலும் வீட்டில் சோதனை நடத்தினர். இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இவரின் முன்ஜாமீன் மனுவை வருகின்ற திங்கள் கிழமை விசாரிப்பதாக நீதிபதி சேஷசாயி கூறியுள்ளார்.
இந்த வழக்கில் அவரது சென்னை வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டில் சோதனையிட போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். நோட்டீசுக்கு தடை கோரி நீதிபதி ஆதிகேசவலு முன் செந்தில் பாலாஜி தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் நோட்டீசுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதி, தொடர்புடைய நீதிமன்ற அமர்வை நாடி நிவாரணம் பெற அறிவுறுத்தினார்.
இதனிடையே செந்தில் பாலாஜி அதிமுகவில் கடந்த 2011-2015-ம் ஆண்டு போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர். ஜெயலலிதா இறந்த பின்னர் அமமுக கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தார். பின்னர் திடீரென செந்தில் பாலாஜி அமமுக கட்சியிலிருந்து விலகி ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். இவர் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது 16 பேருக்கு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ 95 லட்சம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது குறிப்பிடப்படுகிறது.