அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் வெண்கல சிலை திறப்பு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கலச் சிலை திறக்கப்பட்டுள்ளது. சிலையை முதல்வர் பழனிசாமி, தணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆகியோர் திறந்து வைத்ததோடு, மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். இந்த விழாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் உற்சாகமாக கலந்துகொண்டனர். இன்று திறக்கப்பட்ட ஜெயலலிதாவின் சிலைக்குப் பீடம் அமைக்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்தது. சுமார் ஏழு அடி உயரம் கொண்ட ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கலச் சிலை, ஆந்திர மாநிலம் குண்டூரில் செய்யப்பட்டு கடந்த வாரம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது
மேலும், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நாளிதழை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டனர் .இதனை தொடர்ந்து, இன்று ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட அம்மா ஸ்கூட்டர் திட்டத்தை துவக்கி வைக்க பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திலும் கலைவாணர் அரங்கிலும் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது