தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை… முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்ப்பு…

  • பரபரப்பான சூழலுக்கு மத்தியில் இன்று அமைச்சரவை கூடுகிறது.
  • கொரோனா வைரஸ் தடுப்பு, தொழில் வளர்ச்சி குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட இருப்பதாக தகவல். 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று  காலை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவுள்ள முக்கிய திட்டங்கள், கொரோனா வைரஸ் தடுப்பு, தொழில் வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.  தமிழக சட்டப்பேரவையின் இந்த  ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த மாதம் 6ம் தேதி நடைபெற்றது. இது இந்த வருடத்தின் முதல் கூட்டம் என்பதால் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். இதையடுத்து  ஆளுநர் உரை மீது விவாதம் மூன்று நாள் நடைபெற்று கடந்த 9ம் தேதி பேரவை கூட்டம் முடிவடைந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் தமிழக அமைச்சரவை கூட இருக்கிறது.  இந்த அமைச்சரவைக் கூட்டத்தில்,  கொரோனா வைரஸ் பாதிப்பு நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. எனவே இதனை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து இந்த  கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருக்கிறது. மேலும்,  தமிழகத்தின் தொழில் வளர்ச்சி குறித்தும்  நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல், மேலும் தேர்தல் நடைபெறாமல் உள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை எப்போது நடத்துவது என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதனால், நாளை நடைபெறும் அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.