நாளை முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 1-ஆம் தேதி மக்களவையில் 2020-2021-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.மத்திய பட்ஜெட் தாக்கல் செய்து முடிந்த நிலையில் நாளை தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் பிப்ரவரி 4-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர்.
2020-2021-ம் ஆண்டிற்கான தமிழக நிதிநிலை அறிக்கை குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது பற்றியும் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் மாநில பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் கொரோனா வைரஸ் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.