ஜனவரி 31 ஆம் தேதி – அகிலன் மறைந்த தினம் இன்று
அகிலன் என்று அறியப்படும் பி. வி. அகிலாண்டம் என்பவர் 1922 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி பிறந்து 1988 ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி வரையிலான காலத்தில் வாழ்ந்த ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார்.இவர் 1922 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருங்காளூரில் பிறந்தார்.
எதார்த்தம் மற்றும் ஆக்கப்பூர்வமான எழுத்து நடைக்கு பெயர் பெற்றவராக அகிலன் அறியப்படுகிறார். அகிலன் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். சிறப்புப் பெற்ற புதின ஆசிரியராக, சிறுகதையாளராக, நாடகாசிரியராக, சிறுவர் நூலாசிரியாராக, மொழிப்பெயர்ப்பாளராக, கட்டுரையாளராக இவருக்கு பல முகங்கள் உண்டு. பெருங்காளூர் என்ற கிராமத்திலேயே அகிலன் தன்னுடைய இளமைப்பருவத்தைக் கழித்தார். அவரது தந்தை வைத்தியலிங்கம் பிள்ளை ஒரு கணக்கு அலுவலர் ஆவார். தன்னுடைய ஒரே மகன் அகிலன் மீது அவர் அளவுகடந்த அன்பு கொண்டிருந்தார். ஆனால் எதிர்பாராவிதமாக அகிலன் தன்னுடைய சிறு வயதிலேயே தந்தையை இழக்க நேர்ந்தது. ஆனால் அவரது தாயார் அமிர்தம்மாள் ஓர் அன்பான மனிதராக இருந்தார், ஆக்கப்பூர்வமான ஒரு படைப்பாளி என்ற முறையில், தன் மகனை ஒரு எழுத்தாளராக அவர் வடிவமைத்தார். பள்ளி நாட்களில் அகிலன் காந்திய தத்துவத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டார், சுதந்திரப் போராட்டத்தில் களமிறங்க வேண்டும் என்பதற்காக புதுக்கோட்டையில் தன்னுடைய கல்லூரிப் படிப்பை தியாகம் செய்தார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் அவர் இரயில்வே அஞ்சல் சேவை பிரிவில் பணியில் சேர்ந்தார். அதன் பிறகு அனைத்திந்திய வானொலி நிலையத்தில் இணைந்து முழுநேர எழுத்தாளராக எழுத்துப் பணியில் ஈடுபட்டார். இவர் எழுதிய கதைகள் பெரும்பாலும் சிறிய பத்திரிகைகளில் தோன்ற தொடங்கின.அகிலன் எழுதிய சித்திரப்பாவை என்ற நாவல் 1975 ஆம் ஆண்டிற்கான மதிப்பு மிக்க ஞான பீட விருதை வென்றது. இந்நாவல் அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. இவர் எழுதிய வேங்கையின் மைந்தன் என்ற வரலாற்று நாவலுக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது கிடைத்தது. எங்கே போகிறோம் என்ற தனித்துவமான சமூக அரசியல் நாவல் 1975 ஆம் ஆண்டில் இவருக்கு ராசா சர் அண்ணாமலை விருதைப் பெற்றுத் தந்தது. கண்ணான கண்ணன் என்ற இவர் எழுதிய குழந்தை நூலுக்கு தமிழக அரசின் கல்வித்துறை சிறப்புப்பரிசு வழங்கி சிறப்பித்தது. அகிலன் 45 தலைப்புகளில் பல்வேறு படைப்புகளை உருவாக்கியுள்ளார். இவற்றில் பெரும்பாலானவை இந்திய மொழிகள் அனைத்திலும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர இவருடைய படைப்புகள் ஆங்கிலம், சீனா, மலாய் மற்றும் ஜெர்மனி மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.