இந்தியா-நியூசிலாந்து போட்டியின் அதிரடி போக்கு உங்களுக்காக… ஷ்ரேயஸ் ஐயரின் அதிரடி குறித்த தகவல்கள்..
- இந்தியா-நியூசிலாந்து போட்டியன் போக்கு.
- அதிரடி காட்டிய இந்தியா.
இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்று உள்ளது.அதன்படி இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டி -20 போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதில், நியூசிலாந்து 132 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதையடுத்து, 133 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா முதல் ஓவரில் 2 பவுண்டரிகள் அடித்து அதிரடிகாட்டிய அவர், அதே ஓவரில் ஆட்டமும் இழந்தார்.
அடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலியும் 11 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், சௌத்தி பந்தில் ஆட்டமிழந்து அதிர்ச்சி தந்தார். இதனால், இந்திய அணி 39 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதையடுத்து, ராகுலுடன் ஷ்ரேயஸ் ஐயர் இணைந்தார். இருவரும் ஆட்ட சூழலுக்கு ஏற்ப விக்கெட்டைப் பாதுகாத்து பாட்னர்ஷிப் அமைத்து நிதானமாக விளையாடினர். ராகுல் இந்த தொடரில் தொடர்ந்து இரண்டாவது முறையாக அரைசதம் அடித்து அசத்தினார். இந்திய அணியின் வெற்றிக்குத் தேவையான பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் அடித்தனர். இந்நிலையில் மீண்டும் ஒரு சிக்ஸரை அடிக்க முயன்ற ஷ்ரேயஸ் சோதி பந்தில் ஆட்டமிழந்தார்.
அவர் 33 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். இந்த இணை 3-வது விக்கெட்டுக்கு 67 பந்துகளில் 86 ரன்கள் சேர்த்து இந்திய அணியின் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்பிறகு, சௌத்தி வீசிய ஓவரில் சிவம் துபே ஒரு சிக்ஸர் அடிக்க இந்திய அணி வெற்றி இலக்கை அடைந்தது. இந்திய அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேஎல் ராகுல் 50 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற அளவில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளும் விளையாடும் 3-வது டி20 ஆட்டம் வரும் புதன்கிழமை ஹாமில்டனில் நடைபெறுகிறது. இதிலும் இந்தியா ஜொலிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.