நாளை குடியரசு தினம் பாதுகாப்பு வலையத்திற்குள் டெல்லி.!
- இந்தியா முழுவதும் நாளை 71-வது குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது.
- தற்போது ராஜபாதை முதல் செங்கோட்டை வரை போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் நாளை 71-வது குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதை தொடர்ந்து தலைநகர் டெல்லியில் முப்படை அணிவகுப்பு பல்வேறு மாநிலங்களின் கலை மற்றும் கலாச்சார எடுத்துரைக்கும் வகையில் நடனங்கள் நடைபெற உள்ளன. அதில் தமிழகம் சார்பில் அய்யனார் கோவில் கொடை விழா போன்ற அமைப்பும் இடம்பெற்றுள்ளது.
குடியரசு தின ஒத்திகைகள் முடிந்துள்ள நிலையில் தற்போது ராஜபாதை முதல் செங்கோட்டை வரை போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறை , துணை ராணுவ படை வீரர்கள் மற்றும் பல்வேறு குழுக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முக்கிய இடங்களில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. குடியுரிமை சட்டத் திருத்தம் போராட்டம் , டெல்லியில் நடைபெறவுள்ள தேர்தல் போன்ற காரணங்களால் எப்போதும் இல்லாத அளவிற்க்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.