இந்திய தேசிய ராணுவத்தை தோற்றுவித்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் இன்று.!

Default Image
  • இந்தியாவின் அகிம்சை முறைக்கு பதிலாக இந்திய தேசிய இராணுவத்தை அமைத்து போராட்டம் நடத்திய போராட்டத் தலைவராவார் சுபாஷ் சந்திர போஸ்.
  • இன்று இந்திய தேசிய ராணுவத்தை தோற்றுவித்த நேதாஜியின் பிறந்த நாளை, இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சுபாஷ் சந்திர போஸ்சின் வாழ்க்கை வரலாறு :

இந்திய மக்களால் நேதாஜி என்று மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் ஜனவரி மாதம் 23-ம் தேதி 1897-ம் ஆண்டு, வங்காள இந்து குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தையின் குடும்பம் 27 தலைமுறையாக வங்க மன்னர்களின் படைத் தலைவர்களாகவும், நிதி மற்றும் போர் அமைச்சர்களாகவும், பணியாற்றி வந்த பெருமைமிக்க மரவு வழியை உடையது. இவரது தாயார் பிரபாவதி தேவி ‘தத்’ எனும் பிரபுக் குலத்திலிருந்து வந்தவர். பின்னர் 8 ஆண் குழந்தைகளும், 6 பெண் குழந்தைகளும் கொண்ட இக்குடும்பத்தில் ஒன்பதாவது பிள்ளையாக சுபாஷ் சந்திர போஸ் பிறந்தார். சந்திரபோஸ் தன் சிறு வயதில் தாய், தந்தையரைவிட தன்னை கவனித்து வந்த தாதியான சாரதா என்பவருடன் பெரிதும் இருந்தார். இந்திய மக்கள் இவரை நேதாஜி (இந்துஸ்தானி மொழியில் மதிப்புக்குரிய தலைவர்) என்றே அழைத்தனர்.

திருமணம் மற்றும் அகிம்சை போராட்டம் :

அதைத்தொடர்ந்து, ஆஸ்திரியாவை சேர்ந்த எமிலி என்பவரை காதலித்து, 1937-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1942-ல் அனிதா போஸ் என்ற ஒரு மகள் பிறந்தார். பின்னர் இவர் இந்தியாவின் அகிம்சை முறைக்கு பதிலாக இந்திய தேசிய இராணுவத்தை அமைத்து போராட்டம் நடத்திய போராட்டத் தலைவராவார். அதிலும், குறிப்பாக இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் தத்துவம் பயின்றவர். பின் லண்டன் சென்று ஐசிஎஸ் தேர்விலும் தேர்ச்சி பெற்றார். இந்திய விடுதலை மீது தீராத ஆர்வம் கொண்ட போஸ் 2-ம் உலகப் போரின் போது இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார்.

சுபாஷ் சந்திர போஸ்சின் இறப்பில் சர்ச்சை :

இந்நிலையில், இந்திய சுதந்திர போராட்ட வீரரான இவர் 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்துவிட்டதாக கருதப்பட்டாலும், அவர் அப்போது இறக்கவில்லை என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. பின்னர் ரஷ்யாவிற்கு சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வடஇந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985-ல் இறந்துவிட்டதாகவும் பல கருத்துக்கள் நிலவியது. ஆனால், 1945 ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது, போஸ் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு மேலும் வலுவூட்டியுள்ளது. தொடர்ந்து இந்திய அரசால் நியமிக்கப்பட்டு இதைப்பற்றி விசாரித்த முகர்ஜி கமிஷன், நேதாஜி அவ்விமான விபத்தில் இறக்கவில்லை எனத் தெரிவித்துவிட்டது. ஆனால், இந்திய அரசு அவ்வறிக்கையை ஏற்கவில்லை.

பாரத ரத்னா விருது திரும்ப வாங்கப்பட்ட நிகழ்வு :

மேலும் 1992-ம் ஆண்டு சுபாஷ் சந்திரபோஸுக்கு இறப்புக்குப் பின்னான இந்தியாவின் மிக பெரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. ஆனால் விருது வழங்கும் குழுவால் சுபாஷ் சந்திர போஸின் இறப்பு குறித்த ஆதாரங்களைத் தர முடியவில்லை எனவே உச்சநீதிமன்ற ஆணையின்படி இவ்விருது திரும்ப வாங்கப்பட்டது. என்னினும் இவரின் இறப்பு இன்றுவரை சர்ச்சையாகவே இருந்து வருகிறது. இதனிடையே சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், ஒரு எடுத்துக்காட்டாக அனைத்து இளைஞர்களின் மனதில் இருந்து வருகிறார்.

இன்று இந்திய தேசிய ராணுவத்தை தோற்றுவித்த நேதாஜியின் பிறந்த நாளை, இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்