சீறிப்பாய்ந்து களைகட்டிய பாலமேடு..!ஆரவார கரகோஷத்துடன் தொடங்கியது ஜல்லிக்கட்டு
- உறுதிமொழி ஏற்புடன் ஆரவார கரகோஷத்திற்கு மத்தியில் சீறிப்பாயத் தொடங்கியது பாலமேடு ஜல்லிக்கட்டு
- பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள் மற்றும் 936 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
தை மாதம் இரண்டாம் நாள் எப்போதும் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி உறுதிமொழி ஏற்புடன் கோலகலமாக தொடங்கியது.
காலை 8 மணிக்கு தொடங்கிய போட்டிகள் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையிலான மேற்பார்வைகுழு மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் மற்றும் தென்மண்டல காவல் துறை ஐஜி சண்முக ராஜேஸ்வரன் மேலும் மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன், ஆகியோர் தலைமையின் கீழ் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியானது பாலமேட்டில் உள்ள மஞ்சமலை ஆற்று திடலில் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது. பாயும் காளைகளையும்-காளையர்களையும் கண்டு களிக்க பார்வையாளர்களுக்கு வசதியாக பேரிகார்டுகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் போட்டியில் பங்கேற்பதற்காக 700 காளைகளும், 936 காளையர்களும் களத்தில் உள்ளனர்.ஜல்லிக்கட்டில் பல்வேறு ஊர்களில் இருந்தும் பங்கேற்கின்றனர்.
ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு முன்னதாக முதலில் கோவில் காளை வாடிவாசலில் அவிழ்த்து விடப்படும்.அவ்வாறு அவிழ்த்து விட்ட பிறகு பதிவு செய்யப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்படுகின்ற காளைகளை பிடிக்க 936 வீரர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு குழுவாக களம் இறக்கப்படுவார்கள்.அதன்படி ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை குழுக்கள் மாற்றப்பட்டு சுற்றுக்கள் முறையில் மற்றொரு குழு இறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.போட்டியின் இறுதியில் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், காளையர்களிடம் பிடிபடாத காளைகளுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படும். ஜல்லிக்கட்டை பலரும் கண்டு களிக்கும் விதத்தில் அவர்களுக்கு வசதியாக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே எல்.இ.டி. டி.வி.க்கள் அமைத்து அசத்தி உள்ளது.
— தினச்சுவடு சார்பாக அனைத்து உறவுகளுக்கும் மாட்டுப்பொங்கல் மற்றும் வள்ளுவர் தின நல்வாழ்த்துக்கள் —-