தமிழகத்தில் கல்வி மற்றும் சுகாதாரம் தரம் உயர்த்தப்பட வேண்டும்!
நடிகர் கமல்ஹாசன் தனியார் கைகளில் இருக்கும் மருத்துவம் மக்களுக்கானதாக மாற வேண்டும் என தான் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள கமல்ஹாசன் ஹார்வர்டு பல்கலை கழகத்தில் தனது அரசியல் பார்வை மற்றும் செயல்படுத்தவிருக்கும் திட்டங்கள் குறித்து விளக்கினார். இதனைத் தொடர்ந்து லெக்சிங்டன் நகரில் தமிழ் மக்கள் மன்றம் மற்றும் தமிழ்ச்சங்கங்கள் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், வெறும் திரைக்கலைஞனாக இருப்பது போதவில்லை என்று எண்ணுவதால் அரசியலுக்கு வர எண்ணுவதாக குறிப்பிட்டார்.
அரசியலுக்கு வந்த பின்னர் 5 ஆண்டுகளில் செய்யவிருக்கும் திட்டங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், ஏழைகளுக்கும் தரமான கல்வி கிடைத்தால், குக்கிராமங்களில் கூட திறமையானவர்கள் உருவாக வாய்ப்பு ஏற்படும் என்று கூறினார். தமிழகத்தில் கல்வி மற்றும் சுகாதாரம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என தான் கருதுவதாகவும், தனியார் கைகளில் இருக்கும் மருத்துவம் மக்களுக்கானதாக மாறவேண்டும் என்றும் கமல்ஹாசன் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.