மகனை மீட்க வேண்டும் ! நித்தியானந்தாவிற்கு எதிராக தாய் தொடர்ந்த வழக்கு முடித்து வைப்பு
- சென்னை உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தா மீது வழக்கு தொடரப்பட்டது.
- இந்த வழக்கினை நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது .
நித்தியானந்தா மீது கடத்தல் மற்றும் சிறுமிகளை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துதல் போன்ற பல்வேறு குற்றங்களில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.இதன் விளைவாக குஜராத்தில் உள்ள அவரது ஆஸ்ரமம் மூடப்பட்டது.இது ஒருபுறம் இருந்தாலும் தினம் தினம் ஒரு வீடீயோவை வெளியிட்டு தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
கர்நாடக மாநிலத்தில் நித்தியானந்தாவிற்கு சொந்தமான பிடதி என்ற ஆசிரமம் நடைபெற்றது வருகிறது.இந்த ஆசிரமத்தில் ஈரோட்டை சேர்ந்த முருகானந்தம் என்பவர் சேர்க்கப்பட்டார்.இவருக்கு ஆசிரமத்தில் பிராணசாமி என்ற பெயர் வைக்கப்பட்டது. ஆனால் அவரது குடும்பத்தினர் பார்க்க ஆசிரமத்தில் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆசிரமத்தில் அனுமதி அளிக்கவில்லை என்றும் மகனை மீட்கக் கோரி அவரது தயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்தார்.மேலும் அவரது வழக்கில், பிடதி ஆசிரமத்தில் தனது மகன் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக நித்தியானந்தா மற்றும் ஈரோடு போலீசார் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து வழக்கினை ஒத்திவைத்தது.
இந்நிலையில் இன்று பிராணசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார்.அப்பொழுது அவர்,சொந்த விருப்பத்தின்படி ஆசிரமத்தில் தங்கியிருப்பதாக தெரிவித்தார். சட்டவிரோதமாக தன்னை அடைத்து வைக்கவில்லை என்றும் தெரிவித்தார். இதை ஏற்று, வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.