டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் முறைகேடா… தேர்வு ரத்து செய்யப்படுமா.. அதிரவைக்கும் தகவல்கள்..

  • டி.என்.பி.எஸ்.,சி எனப்படும் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணைய குழுமம்  நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக தற்போது தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
  • இதனால் இந்த தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணைய குழுமம் சமீபத்தில்  நடத்திய குரூப் 4 தேர்வு கடந்த 2019 செப்டெம்பர் மாதம் முதல் தேதி  நடந்தது. இதில்,  தமிழகம் முழுவதும் 5575 மையங்களில்  16 லட்சத்து 865 பேர் இந்த தேர்வை  எழுதினர். கடந்த சில நாட்களுக்கு முன்னர், தேர்வு முடிவுகளும்  வெளியிடப்பட்டன. அதன் பின்னர் தரவரிசை பட்டியல் வெளியானது. இதில், தேர்வை சிறப்பாக எழுதிய சில தேர்வர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதை தொடர்ந்து அந்த தர வரிசைப்பட்டியலை ஆய்வு செய்த போது, முதல் 100 இடங்களை பிடித்தவர்கள், ராமநாதபுரம் மாவட்டம்  ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிவர்கள் எனக் கூறப்படுகிறது. இதனால், இந்த தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக மற்ற தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த விவகாரம் தற்போது மிகப்பெரிய அளவில் வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இரண்டு மையங்களிலும் தேர்வு எழுதியவர்களில் பெருபாலானவர்கள் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் 15 பேர் மாநில அளவில் முதல் 15 இடங்களில் எவ்வாறு தேர்ச்சி பெற்றனர், என்ற கேள்வி எழுந்தது. ஏற்கனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வு நடைபெற்ற நேரத்தில் கமுதி வட்டாட்சியர் மீனலோசனம், கூடுதலாக வழங்கப்பட்ட OMR விடைத்தாள்களை அவருடைய அலுவலகத்தில் 10 நாட்கள் வரை பதுக்கி வைத்திருந்து, பிறகு TNPSC அலுவலகத்தில் ஒப்படைத்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக, டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வதாக சொல்லப்படுகிறது. ஒரே மாவட்டத்தின் இரு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் மட்டும் மாநில அளவில் முதல் 100 இடங்களைப் பிடித்திருப்பதில் முறைகேடு நடைபெற்றதா? ஏன் 10 நாட்கள் வரை விடைத்தாள்களை வைத்திருந்தனர்? என்பது குறித்து TNPSC உரிய விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும் தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

author avatar
Kaliraj