#BREAKING : முதல்முறையாக 79 வயதில் ஊராட்சி மன்ற தலைவர் -அசத்தும் பாட்டி
- ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
- ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 79 வயது மூதாட்டி வீரம்மாள் 195 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
சென்னை மற்றும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர மீதமுள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 97 ஆயிரத்து 975 பதவிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடைபெற்று முடிந்தநிலையில் இன்று 315 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரிட்டாப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 79 வயது மூதாட்டி வீரம்மாள் 195 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.இதன்மூலம் தமிழகத்தில் 79 வயதில் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்னராக இரண்டு முறை ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய நிலையில், தற்போது மூன்றாவது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் .