குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு – கேரள சட்டப்பேரவையில் தீர்மானம்
- குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
- குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற கோரி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்தார் பினராயி விஜயன்.
பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்ட நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்துவிட்டார்.ஆனால் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.மேலும் வங்கதேசத்தில் இருந்து அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறியும் வகையில் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட்டது. இதன் இறுதி வரைவு பட்டியலும் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது.இதற்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
குறிப்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.இதன் விளைவாக பினராயி விஜயன் தலைமையில் கண்டித்து போராட்டம் நடைபெற்றது. எதிர்கட்சியான காங்கிரசும், ஆளும்கட்சியுடன் கைகோர்த்து இந்த போராட்டத்தில் பங்கேற்றது.இந்நிலையில் இன்று குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற கோரி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்தார் பினராயி விஜயன்.குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.