ஒரே நேரத்தில் சென்னை அருகே சிக்கிய ரவுடிகள் 74 பேர் சிறையில் அடைப்பு!

Default Image

ஒரே இடத்தில்  சென்னை அருகே சிக்கிய 74 ரவுடிகள் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மலையம்பாக்கம் பகுதியில் ரவுடியின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற 75 ரவுடிகளை காவல்துறையினர் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவர்கள் பூந்தமல்லி மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்ட பின் சென்னையில் உள்ள தொடர்புடைய பல்வேறு காவல் நிலையங்களுக்கு அவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் மீது உள்ள பழைய குற்ற வழக்குகள் ஆய்வு செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து ரவுடிகளில் 71 பேர் சைதாப்பேட்டை, எழும்பூர், பூந்தமல்லி உள்ளிட்ட நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் 3 பேர் சட்டப் பிரிவு 102-ன் கீழ் இனி குற்றச் செயல்களில் ஈடுபடமாட்டோம் என ஏற்கனவே எழுதிக் கொடுத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சட்டப் பிரிவு மீண்டும் அவர்கள் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமலேயே சிறையில் அடைக்க வகை செய்கிறது. அதன்படி அவர்கள் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாமலேயே புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் ஒருவர் போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

போலீசாரின் அதிரடி நடவடிக்கையின் போது, தப்பிச் சென்ற பினுவையும், அவனது கூட்டாளிகளான விக்கி என்ற விக்னேஷ், கனகு என்ற கனகசபை ஆகியோரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

3 கொலை வழக்கு மற்றும் நீதிமன்றப் பிடியாணை காரணமாக பினு சொந்தமாநிலமான கேரளாவில் தலைமறைவாக இருந்த நிலையில் மீண்டும் தான் சென்னைக்கு வந்துவிட்டதைக் காட்டும் வகையிலும் தனது எதிரிகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலுமே பிறந்தநாள் விழாவுக்கு ஏற்பாடு செய்திருக்க வாய்ப்பு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கொலை உள்ளிட்ட முக்கிய குற்றங்களில் தொடர்புடைய பினுவும், கூட்டாளிககளும் 2011-ஆம் ஆண்டில் இருந்து தேடப்பட்டு வருகின்றனர். பினுவும் அவனது கூட்டாளிகளும் சேலத்துக்கு தப்பிச் சென்றிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் சேலத்துக்கு விரைந்துள்ளனர்.

இதனிடையே ரவுடிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 88 செல்ஃபோன்கள் மூலம் பிறந்த நாள் விழாவுக்கு யார் யார் வந்தனர், தப்பிச்சென்றவர்கள் யார் யார் ? அவர்களில் தேடப்பட்டு வரும் பிரபல ரவுடிகள் உள்ளனரா உள்ளிட்ட விவரங்களை கண்டறிய போலீசார் திட்டமிட்டுள்ளனர். பிறந்த நாளுக்காக அவர்கள் பெரிய அளவில் ஒன்றுகூடக் காரணம் என்ன? அதன் பின்னணியில் என்ன திட்டம் வகுத்திருந்தார்கள் என்ற தாகவல்களும் கிடைக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.

மேலும் ரவுடிகளின் செல்போன் தரவுகளை ஆய்வு செய்வதன் மூலம் அவர்களின் முந்தைய குற்றங்கள் தொடர்பான ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் குற்றங்களை உறுதி செய்ய முடியும் என்றும் போலீசார் கருதுகின்றனர். ரவுடிகளின் எதிர்காலத்திட்டங்கள், அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் உள்ளிட்ட தகவல்களையும் பெற போலீசார் முயற்சித்து வருகின்றனர். எனவே இந்த செல்ஃபோன்கள் மேலும் பல ரவுடிகளை கைது செய்ய முக்கிய ஆதாரமாக இருக்கக் கூடும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்