வரலாற்றில் இன்று(25.12.2019).. ரேடியம் கண்டுபிடிக்கபட்ட தினம்..
- மேரி க்யூரி, பியரி க்யூரி இருவரும் இணைந்து கதிரியக்கத்தை கண்டறிய ஆய்வு மேற்கொண்டனர்.அதில், இரண்டு புதுவகை கதிரியக்க தனிமங்களைக் கண்டறிந்ததாக 1898-ம் ஆண்டு டிசம்பர் 25ல் ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டனர்.
- அந்த ஆய்வுக்கட்டூரை வெளியிட்ட தினம் இன்று.
அந்தத் தனிமங்களுக்கு பொலோனியம் (Polonium) மற்றும் ரேடியம் (Radium) என்று பெயரிட்டனர். மேரி க்யூரி, தன் தாய்நாடான போலந்தைக் கௌரவிக்கும் வகையில் ‘பொலோனியம்’ என்றும், மற்றும் ஒரு தனிமத்திற்க்கு லத்தீன் மொழியில் ‘ஒளிக்கதிர்’ என்று பொருள்கொண்ட ரே என்ற சொல்லில் இருந்து ரேடியம் என்றும் பெயரிட்டார்.இதில், இந்த ரேடியம் என்பது யுரேனியத்தை விடப் பல லட்சம் மடங்கு கதிர்வீச்சு உடையது. ரேடியத்தைப் பயன்படுத்திப் புண்களைக் குணமாக்கலாம் எனக் கண்டறிந்தனர்.
இதற்குக் கதிரியக்க சிகிச்சை அல்லது ரேடியம் சிகிச்சை என்று பெயர். ஆனால் இந்தக் கண்டுபிடிப்பைக் கியூரி தம்பதியினர் தங்களுக்கு உரியதாகக் காப்புரிமை பெற்றுப் பணம் சம்பாதிக்க நினைக்கவில்லை. எனவே, கியூரி தம்பதியினரின் தன்னலமற்ற இந்தப் பெருந்தன்மை அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்த ரேடியம் கண்டுபிடிப்புக்குப் பிறகு அதனைப் பயன்படுத்தி மருத்துவசேவை புரிவதிலும் மேரி கியூரி ஈடுபட்டார். முதல் உலகப்போரில் ரேடியத்தைப் பயன்படுத்தி ராணுவ வீரர்களின் காயங்களை குணப்படுத்தினார். மேலும், நடமாடும் எக்ஸ்ரே வண்டிகளை இயக்கிப் போர்வீரர்களின் உடலில் குண்டு பாய்ந்த இடங்களைக் கண்டறிந்து உடனுக்குடன் சிகிச்சை பெற உதவினார். போரின் போது இருபதுக்கும் மேற்பட்ட கதிரியக்க வண்டிகளை இவ்வாறு இயக்கிப் பலர் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
வாழ்நாள் முழுவதும் ஆய்வுகள், புதிய கண்டுபிடிப்புகள் என தன் வாழ்வையே அர்ப்பணித்த இவருக்கு, கதிர்வீச்சின் பாதிப்புக்கு அதிகமாக ஆளானார். அதனால், அப்லாஸ்டிக் அனாமியா (Aplastic anemia) என்கிற ரத்தச் சோகையால் பாதிக்கப்பட்ட மேரி க்யூரி, தனது 66-வது வயதில், 1934-ம் ஆண்டு உலகை விட்டுப் பிரிந்தார். மேரி க்யூரி கண்டறிந்த ரேடியம் வெளிப்படுத்தக்கூடிய காமா கதிர்கள்தான்,
இன்று புற்றுநோய் சிகிச்சைக்குப் பெருமளவில் பயன்படுகின்றன. மனிதநேயம், தொண்டு ஆகியவற்றின் இலக்கணமாக திகழ்ந்த இவருக்கு, 1923-ம் ஆண்டு ரேடியம் கண்டுபிடிக்கப்பட்டதன் வெள்ளிவிழா கொண்டாடப்பட்டபோது பிரெஞ்சு அரசு மேரி கியூரிக்குச் சொந்தச் செலவுக்காக ஆண்டுதோறும் 40 ஆயிரம் பிராங்குகள் வழங்கப்படும் என்றும், அவருடைய மறைவுக்குப் பின் அவருடைய மகள்களுக்கு இது வழங்கப்படும் எனவும் அறிவித்தது.