சென்னை சூப்பர்கிங்ஸ் அணியில் இடம்பெறாதது குறித்து மனம் திறந்த அஷ்வின் !
சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெறாதது தனக்கு ஏமாற்றத்தை அளித்தது என்று கூறியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக (சிஎஸ்கே) கடந்த 8 வருடங்களாக ஆடி வந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின். அவரை ஏலத்தில் எடுப்போம் என்று சிஎஸ்கே கேப்டன் தோனி கூறியிருந்தார். ஆனால், எடுக்கவில்லை. அவரை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.
இதுபற்றி அஸ்வின் அளித்துள்ள பேட்டியில், ‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த 8 வருடமாக இருந்திருக்கிறேன். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எனக்கென்று ஓர் இடம் இருக்கிறது. நான் பந்து வீச வந்தால், ரசிகர்களின் ஆரவாரமும் கைதட்டல்களும் காதை பிளக்கும். அதை என் கவனத்தில் வைத்திருப்பேன். அந்த அணியில் நான் மீண்டும் இடம்பெற முடியாமல் போனதில் எனக்கு வருத்தம்தான். இந்த மைதானத்தில் எனக்கு பல பெருமைமிகு நினைவுகள் இருக்கின்றன. இப்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாட இருக்கிறேன். அந்த அணிக்கான உடை அணிந்து சென்னையில் பந்துவீசுவதை நினைக்கும்போது சுகமாக இருக்கிறது. எனது சொந்த மைதான ரசிகர்கள் முன்பு, என் திறமையை நிரூபிக்க மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கிறேன். பஞ்சாப் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்பது பற்றி யாரும் என்னிடம் பேசவில்லை.
விராத் கோலி பற்றி கேட்கிறார்கள். அவர் எப்போதும் வெற்றியை பற்றி மட்டுமே நினைப்பவர். அவரிடம் எதிர்மறை எண்ணங்களே இல்லை. அதுவே அணியில் எல்லோருக்கும் உத்வேகத்தைக் கொடுக்கும்’ என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.