#BREAKING : உன்னாவ் பாலியல் வழக்கு – எம்எல்ஏ குல்தீப்புக்கு ஆயுள் தண்டனை,ரூ.25 லட்சம் அபராதம்
- உன்னாவில் பாலியல் வழக்கில் எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
- குல்தீப்புக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உத்திர பிரதேச மாநிலம் உன்னாவ் தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் குல்தீப் சிங்கும், அவரது கூட்டாளிகளிலும் விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டனர்.இது தொடர்பாக புகார் அளிக்க சென்ற அந்த பெண்ணின் தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டு இருந்த போது உயிரிழந்தார்.சமீபத்தில் பாதிக்கப்பட்ட பெண், அவரது வழக்கறிஞர், அவரது தாய், உறவினர் பெண் ஆகியோர் சென்றபோது திடீரென லாரி மோதி அந்த பெண்ணின் தாயும், உறவின பெண்ணும் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட பெண் மற்றும் வழக்கறிஞர் உயிர்தப்பினார்கள். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரிய சர்ச்சையாக வெடித்தது. இதற்கு இடையில் பாஜகவில் இருந்து குல்தீப் சிங் நீக்கப்பட்டார்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவு பிறப்பித்தது. உன்னாவ் பாலியல் வழக்குகள் அனைத்தும் உ.பி.யில் இருந்து டெல்லி நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு ,சிபிஐ விசாரிக்க உத்தரவு பிறப்பித்தது.இதனைதொடர்ந்து கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி சிபிஐ மற்றும் எம்எல்ஏ தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து டெல்லி நீதிமன்றம் விசாரணை நடத்தியது.அதில்,பாலியல் வழக்கில் எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.மேலும் எம்எல்ஏவுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.இதனை தொடர்ந்து இன்று குல்தீப்புக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும்,அந்த தொகையில் 10 லட்சம் ரூபாயை பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.