ஹார்லி டேவிட்சன் தீவிரம்!விரைவில் புதிய பேட்டரி மோட்டார் பைக்…
தற்போது பேட்டரி மோட்டார் சைக்கிள் உருவாக்கத்தில் தீவிரம் காட்டி வருகிறது, அமெரிக்காவின் குரூயிஸ் மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ஹார்லி டேவிட்சன். ஆட்டோமொபைல் உலகமே பேட்டரி வாகன தயாரிப்பில் கவனம் செலுத்தி வரும் நிலையில், தனித்து இருக்க கூடாது என்பதில் ஹார்லி டேவிட்சன் நிறுவனமும் கவனமாக உள்ளது.
இந்த மோட்டார் சைக்கிளுக்கு இன்னமும் பெயர் சூட்டப்படவில்லை. ஒரு முறை சார்ஜ் செய்தால் 80 கி.மீ. தூரம் ஓடும் வகையில் இது தயாரிக்கப்பட்டு வருகிறது. பேட்டரி வாகனங்கள் என்றாலே மிகவும் மெதுவாக ஓடுபவை என்ற குற்றச்சாட்டும் பரவலாக உள்ளது. அதை பொய்யாக்கும் வகையில் 4 விநாடிகளில் 95 கி.மீ. வேகத்தை எட்டும் வகையில் இது தயாரிக்கப்படுகிறது.
பேட்டரி மோட்டார் சைக்கிள் சந்தை மிகச் சிறியதாக இருந்தாலும் எதிர்காலத்தில் மிகச் சிறப்பான வரவேற்பைப் பெறும் என்பதாலேயே இத்தகைய முயற்சியில் இறங்கியுள்ளது. பேட்டரி வாகனத் தயாரிப்புக்காக ஆண்டுக்கு 2.5 கோடி டாலர் முதல் 5 கோடி டாலர் வரை செலவிட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று நிறுவனத்தின் நிதித்துறை தலைமை அதிகாரி ஜான் ஆலின் தெரிவித்துள்ளார்.
ஹார்லி டேவிட்சன் தயாரிப்புகள் எப்போதுமே குரூயிஸ் ரகத்தைச் சேர்ந்தவை. நீண்ட தூரம் பயணிப்பவர்கள் விரும்பும் மோட்டார் சைக்கிளாக சர்வதேச அளவில் பிரபலமானது. இதேபோல பேட்டரி வாகனமும் சர்வதேச அளவில் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கலாம்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.