வரலாற்றில் இன்று (டிசம்பர் 18 ) – ஜோசப் ஸ்டாலின் பிறந்த தினம் இன்று

Default Image
  • ஜோசப் ஸ்டாலின் சோவியத் ஒன்றியத்தின் அதிபராகப் பல்லாண்டுகள் ஆட்சி செய்தவர்.
  • இன்று ஜோசப் ஸ்டாலினின் பிறந்த நாள் ஆகும். 

ஜோசப் ஸ்டாலின் சோவியத் ஒன்றியத்தின் அதிபராகப் பல்லாண்டுகள் ஆட்சி செய்தவர் ஆவார்.ஜோசப் விசாரியோனவிச் ஸ்டாலின்  என்பது இவருடைய இயற்பெயராகும்.இவர் டிசம்பர் 18 ஆம் தேதி , 1878-ஆம் ஆண்டு  ஜார்ஜியாவில் கோரி என்னும் நகரில் கேகே மற்றும் பெசோ தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். இவருக்கு முன் பிறந்த இரண்டு குழந்தைகளும் இறந்துவிடவே, ஒற்றை மகனாக இவர் வளர்க்கப்பட்டு வந்தார். சிறுவயது முதலே இவரின் எதிர்காலம் குறித்து இவருடைய பெற்றோரிடம் கருத்து வேறுபாடுகள் இருந்து வந்திருக்கின்றன. இவருடைய தாயார் கேகே இவரை நன்றாகப் படிக்க வைக்க விரும்பியிருக்கிறார். ஆனால், இவருடைய தந்தை பெசோ கொடிய வறுமை காரணமாக, இவரை சுயமாக உழைக்கச் செய்து குடும்பத்தை வாழவைக்கப் பணித்திருக்கிறார்.

ஜார்ஜியன் மொழி இவருடைய தாய்மொழியாகும். இது ரஷிய மொழியிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. எனினும், ரஷிய மொழியை இவர் பின்நாட்களில் கற்றுக் கொண்ட போதிலும், அதனை இவர் ஜார்ஜிய மொழிச்சாயலுடனேயே எப்போதும் பேசி வந்தார். தாயின் அரவணைப்பில் கோரி நகரிலுள்ள ஒரு மடாலயப் பள்ளியில் பல்வேறு உதவித் தொகைகளைப் பெற்றுக்கொண்டு இவர் கல்வி பயின்றார்.அங்குப் படிக்கும் காலத்திலேயே, தன்முனைப்பும், மிகுதியான துணிச்சலும் இருந்த காரணத்தினால் பல்வேறு சமூகக் குழுக்களின் தலைமைப் பண்பை ஏற்று வழிநடத்தி வந்திருக்கின்றார்.இவரது தலைமையிலான குழு முதலிடத்தில் காணப்பட்டது.

பதின் பருவத்தில் டிரிப்ளிசில் ஓர் இறையியல் கல்விக் கூடத்தில் கல்விபயிலத் தொடங்கினார். அங்கு இவருக்கு, கார்ல் மார்க்ஸ்சின் சிந்தனைகளை கற்கும் சூழல் அமைந்தது. மார்க்சியக் கொள்கைகள் மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக, உடன் அங்கிருந்த உள்ளூர் பொதுவுடைமைக் கட்சி ஒன்றில் தன்னை இணைத்துக்கொண்டிருக்கிறார். அக்கால கட்டத்தில் சோவியத் நாட்டை ஆட்சி புரிந்துவந்த சிஸர் நிக்கோலஸ்-II என்பவரின் ஆட்சிக்கு எதிராக, அப்போது ரஷ்யாவில் பல்வேறு குழுக்களின் மனநிலை நிலவியது. சிஸர் நிக்கோலஸ்-II வின் முதலாளித்துவம், தனியார்மயம் மற்றும் முதல் உலகப்போரில் ரஷ்யாவை வலிந்து ஈடுபடுத்திய செயல் போன்றவை மக்களிடையே பரவலான எதிர்ப்பை உருவாக்கியி இருந்திருக்கிறது. பட்டம் பெற சில மாதங்கள் இருந்த நிலையில், 1899 இல், புரட்சிக் கருத்துகளைப் பரப்புரை செய்ததற்காக கல்விக் கூடத்திலிருந்து வெளியேறும சூழ்நிலை ஏற்பட்டது. கி.பி. 1900 இல் ஸ்டாலின், ஒரு புரட்சியாளராக, சிஸர் நிக்கோலஸ்-II க்கு எதிராக தனது முதல் உரையை நிகழ்த்தினார்.

அதன்பின்னர், தலைமறைவு புரட்சிக்குழுவினருடன் தன்னை இணைத்துக்கொண்ட ஸ்டாலின் முதன் முதலாகக் காவலர்களால் 1902 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, 1903 ஆம் ஆண்டு வரை சைபீரிய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து விடுதலைப் பெற்றதும் சிஸர் நிக்கோலஸ்-II க்கு எதிராக நடந்த ரஷ்யப்புரட்சி(1905) யின்போது புரட்சியாளர்களை ஒருங்கிணைக்கும் போல்ஷ்விக்சின் (Bolsheviks) தலைமைப் பணியைச செவ்வனே செய்தார் ஸ்டாலின். இதற்கிடையில், 1902-1913 கால கட்டத்தில் ஸ்டாலின் பலமுறை சிறைக்குச் சென்றும், அச்சிறையிலிருந்து ஆறு தடவைத் தப்பிப் பிழைத்ததும் நடந்தேறி உள்ளன. இதனிடையில், தன்னுடன் இறையியல் கல்விக் கூடத்தில் படித்த தனது நண்பன் ஒருவனின் சகோதரியான யெகேத்தரினா என்னும் பெண்ணைக் காதலித்து 1904 இல் திருமணம் புரிந்தார்.

கி.பி.1905 இல் லெனினை ஸ்டாலின் முதன் முதலில் சந்தித்தார். அப்போது ஸ்டாலினின் திறமைகல் பற்றி அறிந்துகொண்ட லெனின் அவரை மிகவும் ஊக்கப்படுத்தினார். அதற்குப்பின் பல சமயங்களில் ஸ்டாலின் நடத்தி முடித்த கொள்ளைகள் மூலம் போல்ஷ்விக்சின் பொருளாதாரத்தை உயர்த்த உதவி உள்ளார். 1912 இல் லெனினின் கம்யூனிஸ்ட் கட்சியின் இதழான ப்ரவ்டா (Pravda) வின் செய்தியாசிரியராக (Editor) நியமனம் செய்யப்பட்டார். அதன்பின், அதே 1912 ஆம் ஆண்டில் போல்ஷ்விக்சின் மத்தியக் குழுவில் ஸ்டாலின் உறுப்பினராக்கப்பட்டு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முக்கிய நபராக உருவாக்கப்பட்டார். அவர் செய்தியாசிரியராக பணியாற்றியபோது தாம் எழுதிய முதல் புரட்சிக் கட்டுரையின் முடிவில் ஸ்டாலின் என்னும் புனைப்பெயரில் கையெழுத்திட்டதன் மூலமாக ஜோசப் ஸ்டாலின் எனும்பெயர் வரலாற்றில் நிலைத்துவிட்டது.இன்று இவருக்கு பிறந்த நாள் ஆகும் .

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்