அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு ! விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

- வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது.
- வழக்கின் விசாரணை ஜனவரி 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மதுரை தல்லாக்குளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அந்த வழக்கில், 2011 முதல் 2013 -ஆம் ஆண்டுகளில் அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி தனது பதவியை பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மனுவில் தெரிவிக்கப்பட்டது.மேலும் இது தொடர்பாக லஞ்சஒழிப்புத்துறை ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவு பிறப்பித்தது.
ஆனால் வழக்கில் முகாந்திரம் இல்லை என்று நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவித்தது.இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம் ராஜேந்திர பாலாஜியின் வருமானம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தது.இந்த நிலையில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்த தகவலில், குறைந்த சதவீத அளவிலேயே அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சொத்து அதிகரித்துள்ளது. 750 பக்கங்கள் கொண்ட முதல் கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஜனவரி 23ம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.