அசாம் மாநிலத்தில் போராட்டம் தீவிரம்.! வங்கதேச அமைச்சர் வருகை ரத்து.!
- வடகிழக்கு மாநிலங்களில் நீடிக்கும் போராட்டம்! இந்திய வருகையை ரத்து செய்தார் வங்கதேச அமைச்சர்.
- குடியுரிமை மசோதா தொடர்பான போராட்டங்களின் எதிரொலியாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.
கடந்த தினங்களாகவே வடமாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ள நிலையில் அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பதற்ற நிலை நீடித்து வருகிறது. குறிப்பாக அசாமின் பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பின்னர் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். அசாமில் பா.ஜ.க எம்.எல்.ஏவின் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்குவதுதான் வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடைபெறக் காரணமாகும்.
இந்நிலையில், குடியுரிமை மசோதா தொடர்பான போராட்டங்களின் எதிரொலியாகவே வங்காளதேசத்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமனின் இந்திய வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் வங்காளதேசம் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமன் 12 முதல் 14-ம் தேதி வரை 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாகவும், இன்று மாலை 5.20 மணிக்கு இந்தியா வருவதாகவும் திட்டமிட்டுருந்தது.
ஆனால், அசாம் மற்றும் பல்வேறு வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்று வரும் போராட்டங்களால் வங்கதேசத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் மோமன், அவரது இந்திய வருகையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.