ஒரு லட்சத்து 48 ஆயிரம் கோடி ரூபாய் ரயில்வே மேம்பாட்டிற்காக ஒதுக்கீடு !

By

மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி  ரயில்வே மேம்பாட்டிற்காக ஒரு லட்சத்து 48 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவித்திருக்கிறார். ரயில்களில், வை-பை வசதி மற்றும் சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்படும் என்றும் உறுதியளித்திருக்கிறார்.

2018-2019ஆம் நிதியாண்டிற்கான பொது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி ரயில்வேத்துறைக்கான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ரயில்வே துறையின் விரிவாக்கம் மற்றும் நவீனத்துவ மேம்பாடு பணிகளை மேற்கொள்ள, ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 528 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 4 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுள்ள வழித்தடம் மின்மயமாக்கப்படும் என்றும், அடுத்த 2 ஆண்டுகளில், 4 ஆயிரத்து 267 இடங்களில் உள்ள ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் முழுமையாக நீக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

3 ஆயிரத்து 600 கிலோ மீட்டருக்கும் அதிகமான ரயில் வழித்தடங்களில் உள்ள தண்டவாளங்கள், சிக்னல்கள் மறுசீரமைப்பு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள 600 பெரிய ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. 25 ஆயிரம் நடைமேம்பால படிக்கட்டுகள், எஸ்கலேட்டர் வசதி கொண்டவையாக மாற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில், படிப்படியாக வை-பை வசதியும், சிசிடிவி காமிராக்களும் பொருத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Dinasuvadu Media @2023